Published : 22 Jul 2024 05:47 PM
Last Updated : 22 Jul 2024 05:47 PM
புதுச்சேரி: ஆந்திரத்தில் கனமழை தொடர்ந்து வரும் சூழலில் கோதாவரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ளது. ஆந்திர பகுதியில் தொடர் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர பத்ராச்சலம் அணையின் நீர் மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை 43 அடியை எட்டும் போது முதல் எச்சரிக்கை விடப்படும்.
இருப்பினும் ஏனாம் பிராந்திய மண்டல நிர்வாகி முனுசாமி உத்தரவின்பேரில் அனைத்து துறையினரும் பாதுகாப்பு, முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பாலயோகி நகர், பழைய ராஜீவ் நகர், குருசம்பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் அளவை கணக்கிட்டு வருகின்றனர். கனமழை நீடித்தால் ஏனாமில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி கூறியதாவது: “கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து துறைகளும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. போதிய அளவிலான மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்று உணவு வழங்க குடிமைபொருள் வழங்கல் துறையும், வருவாய் துறையும் தயார் நிலையில் உள்ளன. மழைக்கால நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார துறையும், மரங்கள் விழுந்து, மழையில் சிக்கினாலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தீயணைப்புத் துறையும் தயார் நிலையில் உள்ளன” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT