Published : 22 Jul 2024 05:22 PM
Last Updated : 22 Jul 2024 05:22 PM
ராஜபாளையம்: ராஜபாளையத்தை மாநகராட் சியாக தரம் உயர்த்த திட்டமிடப் பட்டுள்ளது. தென் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான ராஜபாளையம் கடந்த 1941-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. அதன்பின், 1955-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1975-ல் முதல்நிலை நகராட்சியாகவும், 1989-ல் தேர்வு நிலை நகராட்சி யாகவும், 2008-ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்ப்பட்டது.
11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் 42 வார்டுகளை கொண்ட ராஜபாளையம் நகராட்சியில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 64,622 ஆண்கள், 65,495 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் இருவர் என மொத்தம் 1,30,119 பேர் வசிக்கின்றனர். ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர், பாதாள சாக்கடை, கார்பன் சமநிலை ராஜபாளையம், அம்ருத் 2.0 திட்டத்தில் சுற்றியுள்ள 9 ஊராட்சிகளை இணைத்து, மாஸ்டர் பிளான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராஜபாளை யத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், என கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கை எழுந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் சிவகாசி, கரூர் உட்பட புதிதாக 6 மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டபோதும், இந்த ஆண்டு காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கியபோதும் ராஜபாளையத்தை மாநகராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், ராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளை இணைத்து, ராஜபாளையம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் கருத்துரு தயாரிக்க ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு நகராட்சி ஆணையர் கடிதம் அனுப்பினார். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளை ராஜபாளையம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து, மான்ராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து தலைமைச் செயலருக்கு எம்.எல்.ஏ. மனு அனுப்பினார்.
தற்போது, ராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள சத்திரப்பட்டி, தளவாய்புரம், சமுசிகாபுரம், மேலபாட்டகரிசல்குளம் உள்ளிட்ட 8 ஊராட்சிகளை முழுமையாகவும், கீழராஜகுலராமன் ஊராட்சியைப் பகுதியாகவும் இணைத்து ராஜபாளையத்தை மாநக ராட்சியாக தரம் உயர்த்த கருத்துரு தயாரிக்க நகராட்சி நிர்வாக இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து கிராமப்புற பொதுமக்கள் கூறுகையில், கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதால், சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் உயர்வதுடன், நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெற முடியாத நிலை ஏற்படும். புதிய சட்ட திருத்தப்படி, ஊராட்சிகளை இணைக்காமலேயே ராஜபாளையத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT