Published : 22 Jul 2024 04:25 PM
Last Updated : 22 Jul 2024 04:25 PM

வேலூரில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலூர்: மேல்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சட்டவிரோத காவலில் விசாரணை கைதி கோபி, என்பவர் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர் கோபி என்ற கோபால் (43). இவரை, பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக குடியாத்தம் தாலுகா போலீஸார் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் அழைத்துச் சென்றனர். மேல்பட்டி காவல் நிலையத்தில் அவரை சட்ட விரோத காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், 1-10-2013 அன்று கோபி மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் குடியாத்தம் உட்கோட்ட டிஎஸ்பி சுந்தரம், குடியாத்தம் தாலுகா ஆய்வாளர் முரளிதரன் மற்றும் காவலர்கள் உமாசந்திரன், இன்பரசன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் மேல்பட்டி காவல் நிலையத்தில் கோபி இறந்தது தொடர்பாக சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், மேல்பட்டி காவல் நிலையத்தில் சட்டவிரோத காவலில் விசாரணை கைதி கோபி இறந்தது தொடர்பான வழக்கு வேலூர் சிபிசிஐடி விசாரணைக்கு கடந்த 2017-ம் ஆண்டு மாற்றப்பட்டது. சிபிசிஐடி ஆய்வாளர் விஜய், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில், ஆய்வாளர் முரளிதரன், தலைமை காவலர் உமாசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் இன்பரசன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். மேலும், அய்வாளர் முரளிதரன், உமாசந்திரன் ஆகியோருக்கு ரூ.1.70 லட்சமும், இன்பரசனுக்கு ரூ.1.60 லட்சமும் அபராதம் விதித்தார். தண்டனை பெற்ற ஆய்வாளர் முரளிதரன் தற்போது வேலூர் கலால் பிரிவு ஆய்வாளராக உள்ளார். உமாசந்திரன், பரதராமி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகின்றனர். இன்பரசன் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தண்டனை பெற்ற மூவரையும் போலீஸார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x