Last Updated : 22 Jul, 2024 04:05 PM

1  

Published : 22 Jul 2024 04:05 PM
Last Updated : 22 Jul 2024 04:05 PM

புதுச்சேரி ரேஷன் கடைகளில் இலவச அரிசி விரைவில் விநியோகம்: முதல்வர் ரங்கசாமி தகவல்

முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: “ரேஷனில் விரைவில் இலவச அரிசி வழங்கப்படும். ஆளுநரின் ஒப்புதல் பெற்றுள்ளோம்” என புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி கமிஷன் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க முதல்வர் மறுத்து விட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி இன்று பேசியது:"பள்ளிகளில் மாலையில் சிறுதானிய உணவும், காலையில் ரொட்டி பால் தருகிறோம். முன்பு பழம் தந்தோம். தற்போது பழம் தரும் எண்ணம் உள்ளது. சிறுதானிய உணவுடன் கடலை மாலையில் தர எண்ணம் உள்ளது. குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் நோயற்ற வாழ்வு வாழ முடியும். மருத்துவர்களிடம் செல்வது குறையும். பழங்கள் சாப்பிடுவது நல்ல பழக்கம்.

தற்போது பழக்கடைகள் அதிகரித்துள்ளன. சிறுதானியத்தில் நல்ல சத்து உள்ளது. சத்தான கம்பு, கேழ்வரகு சாப்பிடுவதை விட்டுவிட்டோம். தற்போது மீண்டும் சாப்பிட தொடங்கியுள்ளனர். சத்துக்காக கரோனாவுக்கு பிறகு தினமும் 2 முட்டை பலரும் சாப்பிடுகின்றனர். நல்ல ஆரோக்கிய உணவு அவசியம். அரசு மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இலவச அரிசி ரேஷனில் விரைவில் வழங்கப்படும். சொன்னதுபோல் தருவோம். கூடுதலாக மானிய விலையில் பருப்பு, எண்ணெய் தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கியுள்ளோம். அரிசி டெண்டர் போட்டுதான் தரமுடியும். அதன் பிறகு தெரிவிக்க முடியும். ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவுத் துறை டான்பெட் மூலம் தரவும் திட்டமிட்டுள்ளோம். சுகாதாரத் துறையானது நிபா வைரஸ் வேறு மாநிலத்தில் இருந்து புதுச்சேரியில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்" என முதல்வர் கூறினார்.

நிதி கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, முதல்வர் பதில் அளிக்கவில்லை. மீண்டும் நிருபர் அக்கேள்வி கேட்டதற்கும் அவர் பதில் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவப்பு அட்டைக்கு இலவச அரிசி: இதனிடையே, புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தனது தொகுதியில் தேசிய ஊரக வேலைத்திட்டப் பணிகளை இன்று தொடக்கி வைத்தார். அப்போது பெண்கள் அவரிடம் கோரிக்கைகளை வைத்தபோது, “முன்பு பத்து நாட்கள்தான் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை தரப்பட்டு வந்தது. தற்போது 95 நாட்கள் வரை வேலைதிட்டத்தில் பணி தரப்படுகிறது. மோடி மட்டும்தான் நூறு நாள் வேலை தருகிறார். தற்போது ரூ. 319 சம்பளம் தரப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் அனைவரும் வேலை செய்யுங்கள்” என்றார்.

அப்பணியைத் தொடக்கி வைத்த பிறகு கிராம மக்களிடம் பேரவைத் தலைவர் கூறுகையில், “ரேஷனில் இந்த மாதம் முதல் அரிசி போட போகிறோம். சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருந்தால் 20 கிலோ இலவச அரிசி தரவுள்ளோம். மஞ்சள் அட்டை வைத்திருந்தால் கிலோ ரூ.1 வீதம் 20 கிலோ விநியோகிக்கப்படும். அரிசி மட்டுமில்லாமல் துவரம்பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவையும் ரேஷனில் தரவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x