Published : 22 Jul 2024 02:27 PM
Last Updated : 22 Jul 2024 02:27 PM

“வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.4,378 கோடி ஒதுக்கீடு” - அமைச்சர் சேகர்பாபு தகவல்

அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ரூ 4,378 கோடி அளவில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ள நிலையில், 208 பணிகளில் 108 பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இன்று (22.7.2024) சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அமைந்திருக்கின்ற நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான பணிமனை (ம) பண்டகசாலை இடத்தினையும் மற்றும் வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயன்படுத்தாத பழைய பொது பண்டகசாலை இடத்தினையும் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வடசென்னை மக்களின் வளர்ச்சிக்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்தவதற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதல்வரின் கனவுத் திட்டமான வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இன்று காலையில் இருந்து துறையினுடைய செயலாளர் காகர்லா உஷா, துறையினுடைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, ஏனைய பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்ந்த பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளோடு இன்றைக்கு மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்தோம்.

அதில் ஒரு 6 ஏக்கர் நிலப்பரப்பில், எந்த வகையிலும் பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் உள்ள வாட்டர் பேசின் ரோடு என்று சொல்லப்படுகின்ற இந்த தண்ணீர் தொட்டி தெருவிலும், அதேபோல் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அமைந்திருக்கின்ற பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பணிமனை இடங்களையும், அந்த இடங்களை மக்களுடைய எல்லா வகையான பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற நல்ல நோக்கத்தோடு இன்றைக்கு ஆய்வினை மேற்கொண்டோம்.

அதைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டு வருகின்ற திருமண மண்டபம், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் கட்டப்படுகின்ற கூடுதல் பள்ளிக் கட்டிடம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூபாய் 12.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற இரத்த சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் பணிகள் குறித்து இன்று ஆய்வினை மேற்கொண்டோம்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தை பொறுத்தளவில் முதல்வர் ரூபாய் 4,378 கோடி அளவில் செயல்படுத்த ஆணையிட்டு இருக்கின்றார். அதில் 208 பணிகளில் 108 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மீதம் 100 பணிகள் மேற்கொள்ளவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து அந்தந்த துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றன.

இதில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் திட்டப்பணிகள் சுமார் ரூ. 685 கோடி செலவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே மேற்கொண்டு இருக்கின்றது. ரூ. 4,378 கோடியில் கிட்டத்தட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ. 1,619 கோடியை முதல்வர் உத்தரவின் பெயரில் பங்களிப்பாக பல்வேறு துறைகளுக்கு வழங்கி இருக்கின்றது. இந்த திட்டங்கள் நிறைவு பெறுகின்ற பொழுது வடசென்னை மிகப் பெரிய வளர்ச்சி பெறும்.

முதல்வர் மு.க. ஸ்டாலகின் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த போது சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 10 பாலங்களைக் கட்டினார். தற்பொழுது வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 4,378 கோடி செலவில் 218 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைகின்ற பொழுது நிச்சயமாக வட சென்னை பகுதி மக்களுடைய வாழ்வாதாரம் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவு பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x