Published : 22 Jul 2024 02:10 PM
Last Updated : 22 Jul 2024 02:10 PM

கள் விற்பனைக்கான தடையை நீக்க அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர் முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், 2020 – 21ம் ஆண்டு 39 ஆயிரத்து 760 கோடி ரூபாயும், 2021 – 22 ம் ஆண்டில் 42 ஆயிரத்து 421 கோடி ரூபாயும் விற்பனை செய்துள்ளதாக கூறிய டாஸ்மாக் நிர்வாகம், இந்த ஆண்டுகளில் முறையே 161 கோடி ரூபாயும், 69 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்ததாகக் கூறியுள்ளது. இதன் மூலம் லாபம், வேறு பக்கம் திருப்பி விடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி. மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளதால், டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்டு மதுபானங்களை மட்டும் விற்கிறது. டாஸ்மாக்கில் ஊழல் நிலவுகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளி மாநிலங்களில் மதுபானங்களின் தரம் சிறப்பானதாக உள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்வதாகவும், இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள் விற்பனைக்கு தடை விதித்து 1986-ல் மதுவிலக்கு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும், டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்வதற்கு அனுமதித்து 2003-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்" எனவும் மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அமர்வு, மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்தது. அதே சமயம், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது அரசின் கொள்கை முடிவு எனவும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மக்களுக்காக, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x