Published : 22 Jul 2024 01:35 PM
Last Updated : 22 Jul 2024 01:35 PM
சென்னை: எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 19) எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் மாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும், வழக்கறிஞர்கள் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் நாற்காலிகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்ததன்பேரில் 20 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும், நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த கோரியும் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே. குமரேஷ்பாபு அமர்வில் முறையீடு செய்தார்.
இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT