Published : 22 Jul 2024 01:18 PM
Last Updated : 22 Jul 2024 01:18 PM

நிபா வைரஸ் தொற்று தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

ஓபிஎஸ்

சென்னை: நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றி பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்றாலும், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் பெற்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு.

கரோனா தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து மக்கள் ஓரளவு விடுபட்டிருக்கின்ற நிலையில், கேரளாவில் நிபா தொற்று காரணமாக 14-வயது சிறுவன் உயிரிழந்தார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரத்தினையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. இது மட்டுமல்லாமல், அந்தச் சிறுவனுடன் தொடர்பில் இருந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது என்றும்; இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகும்போது இந்தத் தொற்று அடுத்தவர்களுக்கும் பரவுகிறது என்றும்; காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல் போன்றவை இதற்கான அறிகுறிகள் என்றும்; இந்தத் தொற்று தீவிரம் அடையும்பட்சத்தில் சுவாசக் கோளாறு, மூளையில் வீக்கம் போன்றவை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்தச் சிறுவனின் உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுமாறும், பொதுச் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டு இருந்தாலும், அந்த வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

எனவே, கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் யாருக்காவது நிபா வைரஸ் தொற்றுநோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையினை அளிக்க வேண்டுமென்றும்; கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருவேரை பரிசோதனை செய்து அதற்கான அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே அவர்களை அனுமதிக்க வேண்டுமென்றும்; அறிகுறிகள் இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து போதிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும்; இந்தத் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் திமுக அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x