Published : 22 Jul 2024 05:16 AM
Last Updated : 22 Jul 2024 05:16 AM
சென்னை: தமிழகத்தில் நபார்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.11,883 கோடியில் பேரூராட்சி பகுதியில் சாலைகள்என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் நாட்டிலேயே உள்ளாட்சி நிர்வாகத்தில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சென்னை மாநகராட்சிஉட்பட மொத்தம் 25 மாநகராட்சிகள் , 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதல்முறையாக நகராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்கு இடையில் பேரூராட்சி என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடுத்தர மற்றும் சிறு நகரங்களான பேரூராட்சிகள், பெரிய நகரங்களின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்குகின்றன. மக்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பேரூராட்சிகள் துறையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.
நபார்டு திட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.602 கோடியில் 515 சாலைப்பணிகள், 11 பாலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தில் ரூ.812.21 கோடியில் 1583 கிமீ நீளத்துக்கு 1178 சாலைப்பணிகள் நடைபெற்றுள்ளன. மாநில நகர்ப்புறச் சாலை மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.10,469 கோடி மதிப்பில், 137.57 கிமீ நீளத்துக்கு மண் சாலைகள் தார், சிமென்ட், பேவர்பிளாக் சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
மூலதன மானிய நிதித்திட்டத்தில், ரூ.569.66 கோடியில் 355 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின்கீழ் ரூ.210.99 கோடியில் 668 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 15-வதுநிதி ஆணைய மானியத்தில், ரூ.466.55 கோடியில் 3009 பணிகள், தேசிய சுகாதார மையப் பணிகள் திட்டத்தில் ரூ.76.45 கோடியில் 141 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மாமல்லபுரம், வேளாங்கண்ணி பேரூராட்சிகள், தெருக்களில் சுகாதார உணவு மையங்கள், வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நகர்ப்புற வீடற்றவர்களுக்கு வேளாங்கண்ணியில் தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கருமாண்டி செல்லிபாளையம், மாமல்லபுரம், அவிநாசியில் மூன்று தங்குமிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தெருவோர வியாபாரிகள் நலத்திட்டத்தில், 63,173 சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தில், 3 ஆண்டுகளில் ரூ.1,112கோடியில் 1,509 பணிகள், நமக்கு நாமேதிட்டத்தில் 1,199 பணிகள் முடிக்கப்பட் டுள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ரூ.63.50 கோடியில் 77 பேரூராட்சிகளில் 192 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அம்ருத் 2.0 திட்டத்தில் பேரூராட்சிகளில் ரூ.2,391.72 கோடியில், குடிநீர் வசதிகள், பூங்கா மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.91.33 கோடியில் 66 புதிய பேருந்து நிலையங்கள், மேம்பாட்டுப்பணிகள் நடந்துள்ளன. இதுதவிர ரூ.110.32 கோடியில் 51 சந்தைமேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேரூராட்சிகளில் கடந்த 3 ஆண்டுகளில், புதியதாக 99 எரிவாயு மின்தகன கூடங்கள் ரூ.147 கோடியில் அமைக்க உத்தரவிடப்பட்டு, 41 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 12 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைதிட்டம் நிறைவேற்றும் பணிகள் நடக்கின்றன. இதில் 10 பேரூராட்சிகளில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சிகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக, மரங்கள் வளர்க்கதிட்டமிடப்பட்டு, இதுவரை 490 பேரூராட்சிகளில் 4,09,413 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 439 பேரூராட்சிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள 2,66,953 தெருவிளக்குகளை ரூ.155.56 கோடியில் எல்இடி விளக்குகளாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் அனைத்து பேரூராட்சிகளிலும், ரூ.331.84 கோடியில் 41,858 தனிநபர் கழிப்பிடங்கள், 190 இடங்களில் சமுதாயக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தில், ரூ.51.81 கோடியில் 37 மாவட்டங்களில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பழங்குடியின நலத்திட்டத்தில், கடலூர், திண்டுக்கல்,நீலகிரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு ரூ.2.03 கோடியில் குடிநீர் வசதி, சோலார் விளக்கு, தெரு விளக்கு ஆகிய 89 வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
சிறப்பாக திட்டப்பணிகளை நிறைவேற்றிய பேரூராட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உள்ளாட்சிகள் நிர்வாகத்தில் தமிழகம் இந்தியாவில் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT