Published : 10 Aug 2014 02:30 PM
Last Updated : 10 Aug 2014 02:30 PM

வாகனங்கள் மீது மோதிவிட்டு தாறுமாறாகச் சென்ற பள்ளிப் பேருந்து: போதை ஓட்டுநரால் பரபரப்பு

சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிவிட்டு தாறுமாறாகச் சென்ற பள்ளிப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

ஆற்காடு தாலுகா, ரத்தினகிரியில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து மேல்விஷாரத்தில் இருந்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை காலை ரத்தினகிரியை நோக்கிச் சென்றது.

பேருந்தை பெருமுகை, பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி (65) என்பவர் ஓட்டினார். பேருந்து கத்தியவாடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, தாறுமாறாக ஓடியது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு நின்றிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது உரசியபடி சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும், பேருந்தை ஓரமாக நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறினர். ஆனால் ஓட்டுநர் மணி இன்னும் வேகமாக பேருந்தை இயக்கினார். இதனால் முன்னால் சென்ற தண்ணீர் டேங்கர் லாரியின் பக்கவாட்டில் பள்ளிப் பேருந்து பலமாக மோதியது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சிதறியது.

இதனால் உயிருக்கு பயந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், வேகமாக சென்று, பெரிய மசூதி அருகே பேருந்தை வழிமறித்து சிறைபிடித்தனர். பின்னர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குடிபோதையில் பேருந்தை இயக்கியது தெரியவந்தது. உடனே, ஆற்காடு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் ஓட்டுநர் மணியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்ற பின் தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்த மணி, கடந்த 6 மாதங்களாகவே குடிபோதையில் பள்ளிப் பேருந்தை இயக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணிநீக்கம் செய்ய தனியார் பள்ளி நிர்வாகத்திடம் போலீஸார் அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x