Published : 21 Jul 2024 06:45 PM
Last Updated : 21 Jul 2024 06:45 PM

தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பதில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில் 50 முறை பேசிவிட்டதால் இனியும் கர்நாடக அரசுடன் பேசு்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை. எனவே, தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், காட்பாடி அருகே கிளித்தான்பட்டறை பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் இன்று (ஜூலை 21) பங்கேற்றார். இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தென்பென்னை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுக்க தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண உள்ளோம் என்று கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்பேரில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது. ஆனால், தமிழக அரசு ஆணையம் அமைப்பதில் உறுதியாக உள்ளது. காரணம், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகள் தீர்ப்பது நல்லதுதான்.

ஆனால், பிடிவாதக்காரர்களிடம் அது முடியாத காரியமாகும். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகத்துடன் தமிழகம் சுமார் 50 முறை பேசிவிட்டது. அதற்கு பிறகுதான் ஆணையம் அமைக்க வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு தயாராக இல்லை.

முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்துள்ள கண்காணிப்புக் குழு ஷட்டரில் விநாடிக்கு 78 லிட்டர் தண்ணீர் கசிவதாக தெரிவித்துள்ளது. எல்லா அணைகளிலுமே ஷட்டரில் நீர்க்கசிவு என்பது இயல்பானது தான். சிறிய அளவில் நீர்க்கசிவு ஏற்படுவதால் பிரச்னை இல்லை. அம்மா உணவகத்தை முதல்வர் ஆய்வு செய்தது நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாடகம் என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், தற்போது அதிமுகவில் அத்தகைய நாடகம்தான் நடந்து கொண்டுள்ளது, அவர்கள் கூத்துக்காரர்கள். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் ரூ.1,918 கோடி மதிப்புடைய கனிமவளங்கள் கொள்ளை போயிருப்பதாக அந்த துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த கொள்ளை திமுக ஆட்சி காலத்தில் நடந்தது கிடையாது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நடந்தது.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x