Published : 21 Jul 2024 12:46 PM
Last Updated : 21 Jul 2024 12:46 PM
சென்னை: “எங்களுக்கு எதிராக அண்ணன் திருமாவளவனை நிறுத்துவது கொடுமையான விஷயம். திருமாவளவனுக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு நாளும் உங்களுக்கு எதிராக நாங்கள் இருக்க மாட்டோம்.” என்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்துக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், நேர்மையான முறையில் வழக்கை விசாரிக்க வேண்டும் என பதாகைகள் மூலமாகவும், முழக்கங்களை எழுப்பியும் வலியுறுத்தினர்.
அப்போது பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நீங்கள் எங்களை பயமுறுத்தலாம். உங்கள் கட்சியில் சேர்ந்து எம்எல்ஏக்களாக ஜெயித்த அடிமைகள் நாங்கள் கிடையாது. அதை புரிந்துகொள்ள வேண்டும். சென்னை ஒரு மேயர் இருக்கிறார். திமுகவில் இருப்பதால் அந்த அம்மா மேயர் கிடையாது. இடஒதுக்கீடு என்ற வார்த்தையினால் அவர் மேயர் ஆக்கப்பட்டுள்ளார். அதேபோல் கயல்விழி செல்வராஜ், ஆதி திராவிட அமைச்சராக மாறினார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
அம்பேத்கர் வாங்கி கொடுத்த இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் உங்களுக்கு பதவி கிடைத்துள்ளது. எத்தனை பட்டியலின எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் ஏன் ஆம்ஸ்ட்ராங் மரணத்தை வந்து பார்க்கவில்லை. அப்படியென்ன உங்களுக்கு பயம். நீங்கள் ஒன்றுதிரள முடியாதா?. எப்போது இந்த பயத்தில் இருந்து விடுபடப் போகிறீர்கள். உங்களின் கட்சி உங்களை கட்டுப்படுத்துகிறதா?.
பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பேச, போராட முடியவில்லை எனில் எதற்கு உங்களுக்கு இடஒதுக்கீடு. பட்டியலின எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இன்னும் எத்தனை காலம் அடிமைகளாக இருக்கப் போகிறீர்கள். பட்டியலின மக்களுக்கு எதிராக எவ்வளவோ பிரச்சினைகள் திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்துள்ளது. இவ்வளவு பிரச்சினை இருந்தாலும், சுகபோக வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, மக்களுக்கு ஆதரவாக பேச முடியவில்லை எனில் நீங்கள் அடிமைகளா இல்லையா. இனி இவர்கள் பட்டியலின எம்.பி.க்கள், எம்எல்ஏ.,க்கள் பட்டியலின மக்களின் பிரச்சினைகளின்போது வந்து அவர்களை பார்க்கவில்லை என்றால், முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இனி அவர்களை சும்மாவிட முடியாது.
நாம் எதாவது ஒன்று பேசினாலே கதையை கட்டிவிடுவார்கள். எங்களுக்கு எதிராக அண்ணன் திருமாவளவனை நிறுத்துவது கொடுமையான விஷயம். திருமாவளவனுக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு நாளும் உங்களுக்கு எதிராக நாங்கள் இருக்க மாட்டோம். உங்களுக்கு எதிராக நாங்கள் ஏன் இருக்க வேண்டும். எங்களுடைய குரல் நீங்கள். உங்களை ஒரு நாளும் விட்டுவிட மாட்டோம். உங்கள் கூடவே நிற்போம்.
திமுக எதிராக மட்டும் பேசுவதாக சொல்கின்றனர். ஆனால், நாங்கள் எல்லாக் கட்சிக்கும் எதிராக பேசுகிறோம். ஏனென்றால், அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றியுள்ளன. அதிமுக, திமுகவுக்கு தான் நாங்கள் மாற்றி மாற்றி வாக்கு செலுத்தியுள்ளோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு செய்தது என்ன?.
இப்போது நாங்கள் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். உங்களால் முடியுமா? சமூக நீதி பேசும் திமுக அரசால் பட்டியலின மக்களுடைய கோரிக்கையை ஏற்க முடிமா?.” என்று ஆவேசமாக பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT