Published : 21 Jul 2024 11:29 AM
Last Updated : 21 Jul 2024 11:29 AM
மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்குவந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 71,777 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்ந்து, 68.91 அடியாக உயர்ந்தது.
கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு நேற்று காலை 53,098 கன அடியாகவும்,, இரவு 69,673 கன அடியாக உயர்ந்தது.
தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 71,777 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 61.31 அடியில் இருந்த நிலையில் இன்று காலை 68.91 அடியாகவும், நீர் இருப்பு 25.67 டிஎம்சியில் இருந்து 31.77 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 7.6 அடியாகவும், நீர் இருப்பு 6.1 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரத்தை கடந்து வந்து கொண்டிப்பதால், நீர்தேக்க பகுதியான, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதியில் 5 நாட்களாக பரிசல் சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அணை நீர் தேக்கப் பகுதியில் நிலத்தை உழுது பயிரிட்டு இருந்த விவசாயிகள் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பயிர்களை அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான தீவன பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT