Published : 21 Jul 2024 05:19 AM
Last Updated : 21 Jul 2024 05:19 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் முதல் கட்ட அகழாய்வு நடைபெற்றது. அதில், தங்க மூக்குத்திகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பாசி மணிகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றன.
அதன் பிறகு அரண்மனை மேடுபகுதியின் தெற்கில் 2-ம் கட்ட அகழாய்வு ஜூன் 18-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 6 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையிலானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு குழியில் 280செ.மீ நீளமும், 218 செ.மீ அகலமும்கொண்ட செங்கல் தளம் காணப்பட்டது. மேலும், சுமார் 2 செ.மீ நீளமுள்ள 5 செம்பு ஆணிகள், செம்புஅஞ்சன கோல்(மைதீட்டும் குச்சி),கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன.
இதுவரை இரும்பு ஆணிகளே கிடைத்து வந்த நிலையில், தற்போது செம்பு ஆணிகள் கிடைத்திருப்பது வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT