Published : 07 May 2018 09:26 AM
Last Updated : 07 May 2018 09:26 AM
காஞ்சியின் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுத்து, சமூக விரோத கும்பலை பிடிக்க விரைவில் தனிப்படை அமைக்கப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி தெரிவித்துள்ளார்.
கோயில்களின் நகரமாக திகழ்ந்து வரும் காஞ்சிபுரம் நகரில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காஞ்சிபுரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேனம்பாக்கம், திருக்காலிமேடு, பொய்யாக்குளம், பாலியர்மேடு, சேர்மன் தெருவில் உள்ள அண்ணா பூங்கா ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளூர் போலீஸாரின் துணையோடு பெரிய அளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
உயர் போலீஸ் அதிகாரிகள் ரோந்து வரும்போது சிக்காமல் இருப்பதற்காக 25 கிராம் முதல் 100 கிராம் என சிறிய பொட்டலங்களாக, கஞ்சா விற்பனை செய்யும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள சமூக விரோத கும்பல் அப்பகுதியில் வசிக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் ஏற்கெனவே சிறு, சிறு தகராறில் காவல் நிலையம் சென்று திரும்பிய இளைஞர்களை தேர்வு செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.
குடியிருப்பு பகுதிகளின் நடுவே செயல்படும் டியூஷன் சென்டர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும். இதை தட்டிக் கேட்பவர்களை, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள சமூக விரோத கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. அதனால், மாவட்ட காவல் நிர்வாகம் போலீஸாரின் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, புறநகர் பகுதியில் அதிகரித்துள்ள கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி கூறும்போது, “புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்படும். மேலும், தங்கள் பகுதியில் இது மாதிரியான சமூக விரோத செயல்கள் நடைபெற்றால், அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு உடனடியாக தெரிவிக்கலாம். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT