Published : 20 Jul 2024 08:29 PM
Last Updated : 20 Jul 2024 08:29 PM
தேனி: பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை கரையோர உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. இதனால் கொட்டக்குடி, பாம்பாறு, வராகநதி, மூலவைகை உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 11-ம் தேதி 121 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 128.05 அடியாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி வினாடிக்கு 1,178 கனஅடியாக வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 1,400 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், வைகையின் துணை ஆறுகளிலும் இருந்து வரும் கூடுதல் நீரும் இதில் கலக்கின்றன. இதனால் தமிழக எல்லையான லோயர்கேம்ப் முதல் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, தேனி, குன்னூர் வரையிலான முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆகவே ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா கூறுகையில், “தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆகவே யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். கரையோர உள்ளாட்சிகள் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதை தடுப்பதற்கான அறிவிப்புகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT