Last Updated : 29 May, 2018 11:14 AM

 

Published : 29 May 2018 11:14 AM
Last Updated : 29 May 2018 11:14 AM

விழுப்புரம் அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கருதி வட மாநில இளைஞர்கள் மீது தாக்குதல்: 50 பேர் மீது வழக்குப்பதிவு

கச்சிராயப்பாளையத்தில் குழந்தை கடத்த வந்ததாகக் கருதி வட மாநில இளைஞர்களை தாக்கிய 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குல்ஷன் அகமத், சோம்நாத், சித்தார்த் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாந்த், விக்ரம் பாய் உள்ளிட்ட 9 பேர், ஆழ்துளைக் கிணறு அமைக்க கேரள மாநிலத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் சொந்த மாநிலம் செல்ல, விழுப்புரம் மாவட்டம் வழியாக திங்கள்கிழமை இரவு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, வழியில் வாகனத்தை நிறுத்தி, சாப்பிட்டுவிட்டு திரும்பியபோது மேற்கண்ட 5 பேரும் வழிதவறி கச்சிராயப்பாளையம் கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.

பின்னர் உடன் வந்தவர்களை தொடர்பு கொண்ட போது, அவர்கள் ஊருக்கு வெளிப்புறமாக காத்திருப்பதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து 5 பேரும் தனியார் பேருந்தில் ஏறி பயணச்சீட்டு பெறுகையில், இறங்கும் இடம் குறித்து இந்தி மொழியில் கூறியுள்ளனர். இதனால் நடத்துநரும் குழப்பமடைந்துள்ளார். இந்த தருணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிலர், வடமாநில இளைஞர்களை குழந்தை கடத்த வந்ததாகக் கருதி, ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்து, பேருந்தை மாத்தூரில் நிறுத்தி, வடமாநில இளைஞர்களை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று, வடமாநில இளைஞர்களை மீட்டபோது பொதுமக்கள் போலீஸாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, காயமடைந்த 5 வடமாநில இளைஞர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, மாத்தூரைச் சேர்ந்த 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x