Last Updated : 19 Jul, 2024 09:46 PM

 

Published : 19 Jul 2024 09:46 PM
Last Updated : 19 Jul 2024 09:46 PM

ராமநாதபுரத்தில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு - கிராம மக்கள் மறியல்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யச் சென்ற பெண் உயிரிழந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வடக்கு மல்லல் கிராமத்தினர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யச் சென்ற பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக, உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே வடக்கு மல்லலைச் சேர்ந்தவர் தங்கச்சாமி. இவரது மனைவி தவசித்ரா (26). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இரண்டாவது பிரசவத்திற்காக திருஉத்திரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவச்சித்ரா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பின் பெரியபட்டிணத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அறுவை சிகிச்சைக்கு முன் ஊசி மருந்து செலுத்தியதும், அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்நிலையில் தவசித்ரா நேற்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் அலட்சியப் போக்கும், தவறான சிகிச்சையே தவசித்ரா உயிரிழந்ததற்கு காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், கிராம மக்கள் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி முன்பு ராமநாதபுரம் - மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த தவசித்ரா.

அதனையடுத்து ராமநாதபுரம் நகர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அரை மணி நேரத்திற்கு பின் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மருத்துவ அதிகாரிகள், காவல்துறையினர் உயிரிழந்த தவசித்ராவின் குடும்பத்தினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தவசித்ராவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கிராம மக்கள் முன்வைத்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை 20) அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x