Published : 19 Jul 2024 08:04 PM
Last Updated : 19 Jul 2024 08:04 PM
சென்னை: அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து விதிகளுக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் வெள்ளிக்கிழமை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு கனிமவளத் துறையின் வருவாயை பெருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து அறிவறுத்தினார். தொடர்ந்து அவர் பேசும்போது, “சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் வைத்துள்ள நிலுவை தொகையினை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் விதி மீறல்களை ஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும்.
அண்டை மாநிலங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கனிம வளங்களை எடுத்து செல்லும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் செங்கல் சூளை, எம்.சாண்ட் மற்றும் கிரஷர் அலகுகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படைகள் மண்டலங்களில் திடீர் தணிக்கை மேற்கொண்டு கனிமங்கள் கள்ளத்தனமாக எடுத்துச் செல்லுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். இக்கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறை செயலர் க.பணீந்திரரெட்டி, கனிம வளத்துறை ஆணையர் எ.சரவணவேல்ராஜ், கனிம வளத்துறை இணை இயக்குநர்கள், துணை இயககுநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT