Published : 19 Jul 2024 07:56 PM
Last Updated : 19 Jul 2024 07:56 PM
புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்கும் முன்பாகவே ஓடும் ரயிலிலிருந்து பயணிகள் சிலர் இறங்குகின்றனர். இப்படி அவசரத்தில் இறங்கி அதனால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க ரயில்வே நிர்வாகம் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் அதிகளவில் வருகின்றன. தமிழகம், கேரளம் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் புதுச்சேரி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரிக்கு ரயில்கள் வரும்போது ரயில் நிலையத்துக்கு முன்புள்ள ஏஎஃப்டி ரயில்வே கேட்டை தாண்டியவுடன் ரயிலின் வேகம் படிப்படியாக குறையும். இதைப் பயன்படுத்தி பலரும் புதுச்சேரி ரயில்நிலையத்துக்கு செல்லாமல் ரயில் மெதுவாக ஓடிக்கொண்டிருக்கும்போதே இறங்கத் தொடங்குகின்றனர்.
குறிப்பாக, தற்போது ஏஎஃப்டி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் இருப்பதால் ரயில்வே பாலத்தை ஒட்டி மண் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தியும் பலர் இறங்குகின்றனர். ஆபத்தான இந்த செயல் குறித்து நம்மிடம் பேசிய ரயில் பயணிகள் சிலர், "ஓடும் ரயில் மெதுவாகும் போது இறங்குவது ஆபத்தானது. அதை பலரும் செய்கின்றனர். ஏதும் அசம்பாவிதம் நிகழும் முன்பே ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது'' என்றனர்.
சோதனைக்குப் பயந்து நடக்கிறதா? - அதேசமயம் இன்னொரு கோணத்திலும் பேசிய சில பயணிகள், "புதுச்சேரியில் தற்போது போதைப் பொருள் கடத்தலை தடுக்க ரயில் நிலையங்களில் போலீஸார் தொடர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்திலும் போலீஸார் சோதனையிடலாம் என்ற அச்சத்திலும் சிலர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி ஓடுகிறார்கள்" என்றனர். காரணம் எதுவாக இருந்தாலும் சரி, ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் அவசரக் குடுக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தால் நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT