Last Updated : 19 Jul, 2024 06:55 PM

 

Published : 19 Jul 2024 06:55 PM
Last Updated : 19 Jul 2024 06:55 PM

மதுரை மாவட்ட பாஜகவில் 200 நிர்வாகிகள் நீக்கம்: அண்ணாமலை மீது மாவட்ட தலைவர் அதிருப்தி

மதுரை: மதுரை கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜகவில் 200 நிர்வாகிகள் நீக்கப்பட்டது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காத மாநிலத் தலைவரான அண்ணாமலை மீது மாநகர் மாவட்ட பாஜக தலைவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

தமிழக பாஜகவில் மதுரை மாவட்டம் மதுரை மாநகர், புறநகர் என இரண்டாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் மதுரை மாநகர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு என பிரிக்கப்பட்டது. மதுரை புறநகர் மாவட்டத் தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்த மகா.சுசீந்திரன் மதுரை மாநகர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். மதுரை கிழக்கு மாவட்டத்துக்கு ராஜசிம்மன், மேற்கு மாவட்டத்துக்கு சசிகுமார் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

மதுரை புறநகர் மாவட்டம் இருந்தபோது மதுரை கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் புறநகர் மாவட்டத்தில் இருந்தன. புறநகர் மாவட்ட தலைவராக மகா.சுசீந்திரன் இருந்த போது தனது ஆதரவாளர்களை கட்சி நிர்வாகிகளாக நியமித்தார். மதுரை கிழக்கு, மேற்கு மாவட்டத்துக்கு புதிய தலைவர்கள் பொறுப்பேற்றதும் ஏற்கெனவே நிர்வாகிகளாக இருந்த மகா.சுசீந்திரனின் ஆதரவாளர்கள் பலர் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக, மதுரை கிழக்கு மாவட்டத்தில் மகா.சுசீந்திரன் ஆதரவாளர்கள் பலர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு மகா.சுசீந்திரன் புகார் அனுப்பினார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கட்சித் தலைமையை விமர்சித்து மதுரை மாநகர் பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “பாஜக தலைவர்கள் கட்சியின் கடைக்கோடி தொண்டர்களை தேர்வுசெய்து பல்வேறு பொறுப்புகளை கொடுத்து அலங்கரிக்கின்றனர்.

இதை சரியாக பயன்படுத்திவர்கள் குடியரசுத் தலைவர் பதவி வரை பெற்றுள்ளனர். ஆனால், மதுரை வருவாய் மாவட்டத்தில் சில முக்கிய நிர்வாகிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்படுவதுடன் தங்களை சிவனும், பார்வதியும் நேரடியாக பதவியில் அமர்த்தியதாக நினைத்துக் கொண்டு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுக்குள் 200 பேரை பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளனர். கட்சிக்கொடியை காரில் கட்டக்கூடாது என போலீஸில் புகார் செய்து கழற்றச் செய்துள்ளனர்.

எல்லா இடங்களிலும் பாஜக, எல்லோரிடத்திலும் தாமரை என்ற கோஷத்தை பாஜக ஊட்டி வளர்த்து வருவதை கூட மறந்து தொண்டர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது கட்சி சித்தாந்தத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் எதிரானது. இது தெரிந்தும் மாநிலத் தலைமை தொடர்ந்து மவுனமாக இருப்பது உழைத்த தொண்டர்களின் மன வேதனையை உச்சமாக்கி வருகிறது. எனவே, இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தொண்டர்களுக்கு மாநிலத் தலைமை குழு அமைத்து ஆறுதல் கூற முன்வர வேண்டும்.

இது, வரும் தேர்தல்களில் கட்சி எழுச்சியுடன் செயல்பட உதவியாக இருக்கும்,” என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மாநிலத் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து மாவட்டத் தலைவர் ஒருவர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x