Published : 19 Jul 2024 03:38 PM
Last Updated : 19 Jul 2024 03:38 PM

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு:  மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வார காலத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷய அதிநியம் என்ற பெயரில் புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை என அறிவித்து அவற்றை ரத்து செய்யக்கோரி திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “நாடாளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இரு அவைகளில் இருந்தும் 150 எம்பி-க்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், எந்த விவாதமும் இல்லாமல் இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் ஆலோசனைகளைப் பெறாமல், சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்களை சம்ஸ்கிருத மயமாக்கி உள்ளனர். இது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது. குற்றங்களுக்கான தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக்கூறியுள்ள நிலையில் தண்டனைக் குறைப்பு வழங்கும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருடைய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டத்தில், காவல் துறையினருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர் களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்களின் பெயர்கள் இயற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், சம்ஸ்கிருதத்தில் இந்த புதிய சட்டங்களுக்கு பெயர் சூட்டியிருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது” என்றார். அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரினார்.

இதையடுத்து, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சிவில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும், இதேபோல எதிர்ப்பு இருந்தது. எனவே, இதுதொடர்பாக சட்ட ஆணையத்தை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கில் மத்திய அரசு 4 வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x