Published : 19 Jul 2024 01:39 PM
Last Updated : 19 Jul 2024 01:39 PM
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 19) ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியின் 200 கோட்டங்களிலும், அரசு மருத்துவமனையிலும் கடந்த ஆட்சி காலத்தில் 388 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது. இந்த உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை மக்களுக்கு பயனளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது.
இந்த உணவகங்களின் மூலம் தினசரி 1.50 லட்சம் பயனாளிகள் பயன்பெறறு வருகின்றனர். ஓர் ஆண்டில் 4 கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போன்றவை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர் ஆவின் மூலம் பெறப்படுகிறது.
இந்த உணவகங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.148.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை சென்னை மாநகராட்சியால் ரூ.400 கோடி உட்பட ரூ.469 கோடி செலவிடப்பட்டு உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை சென்னை மாநகராட்சி 122-வது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவற்றை சோதனை செய்ததுடன், உணவருந்திய பயனாளிகளுடனும் உரையாடினார்.
பல்வேறு உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை ரூ.7 கோடியில் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். மேலும், ரூ.14 கோடியில் இந்த உணவகங்களை புனரமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வபோது நேரில் ஆய்வுசெய்து, தேவையான உதவிகளை செய்து தரும்படி அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...