Published : 19 Jul 2024 05:15 AM
Last Updated : 19 Jul 2024 05:15 AM

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 5 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 3 நாட்களில் சற்று வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகரக்கூடும். அதேநேரத்தில், மேற்கு திசைக் காற்றிலும் வேகமாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 19) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 18-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 15 செ.மீ., நீலகிரி மாவட்டம் எமரால்டு, கோவை மாவட்டம் வால்பாறையில் 12 செ.மீ., நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 11 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறு, சின்கோனாவில் 10 செ.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூர், விண்ட் வொர்த் எஸ்டேட்டில் 8 செமீ, கூடலூர் சந்தை, மேல் கூடலூர், தேவாலாவில் 7 செ.மீ., நடுவட்டம், பார்வூட், செருமுள்ளியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x