Published : 19 Jul 2024 04:52 AM
Last Updated : 19 Jul 2024 04:52 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்: முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் அடுத்தடுத்து சிக்குவதால் அதிர்ச்சி

கோப்புப்படம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு குழுக்களுக்கு தொடர்பு இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், எதிர் எதிர் குழுக்களை ஒருங்கிணைத்து மூளையாக செயல்பட்டது யார் என தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52), சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின்முன்பு கடந்த 5-ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியை சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூர் திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.

கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாரின் பிடியில்இருந்து தப்பிய திருவேங்கடம் கடந்த14-ம் தேதி போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சூழலில், மற்ற 10 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் அளித்த தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. அதில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநின்றவூரை சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள் (33) என்பவர், கொலையில் முக்கிய பங்காற்றியது தெரியவந்தது. இவர், பொன்னை பாலுவின் மைத்துனர் ஆவார். அவரது செல்போன் உரையாடல்கள், வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணை செயலாளர் மலர்கொடியுடன் அருள் அடிக்கடி பேசிவந்துள்ளார். அருள் - மலர்கொடி இடையே அதிக அளவில் பண பரிவர்த்தனை நடந்துள்ளன என்ற விவரங்களும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மலர்கொடியின் உதவியாளராக இருந்த பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் மூலமாகமும் கொலையாளிகளுக்கு ரூ.1 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர், தமாகா மாநில மாணவர் அணி துணைத் தலைவராக இருந்தவர்.

இவர்களுடன் திமுக திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ் என்பவரும் இணைந்து செயல்பட்டுள்ளார். மேலும்,திருநின்றவூரை சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ் (49) என்பவரும் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் சிக்கியவர்களில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான பல்வேறு குழுக்கள் ஒருங்கிணைந்து இந்த படுகொலை திட்டத்தை செயல்படுத்தி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் கொலை வழக்கில் சிக்கி, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். வட சென்னையில் உள்ள அவரது மகனுக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் மோதல் இருந்துள்ளது. நில விவகாரம் தொடர்பாகவும் முன்விரோதம் இருந்துள்ளது.

இதற்கிடையே, பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் உள்ளதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார். இதேபோல, வேறு சில குழுவினரும் ஆம்ஸ்ட்ராங் மீது வெறுப்பில் இருந்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, கொலை திட்டத்தை செயல்படுத்த, முக்கிய நபர் ஒருவர் மூளையாக செயல்பட்டுள்ளார். இதற்காக முதல் கட்டமாக ரூ.1 கோடி வரை கொலையாளிகளுக்கு பணம் கைமாறி உள்ளது. அந்த நபர் யார்என கண்டுபிடிக்க விசாரணை வளையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேலூர் சிறையில் உள்ள ரவுடியிடமும் விசாரணை நடத்த உள்ளோம்.

ஜாம்பஜாரை சேர்ந்த மறைந்த பிரபல ரவுடியின் மனைவியான மலர் கொடியும் ஆம்ஸ்ட்ராங் உடனான முன்விரோதம் காரணமாக, கொலை வழக்கில் பணத்தை கைமாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பாஜக வட சென்னை மேற்குமாவட்ட துணை தலைவரான புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை (48) என்பவரை தேடி வருகிறோம். தலைமறைவாக உள்ள மேலும் சில ரவுடிகள், முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களையும் தேடி வருகிறோம்.

மிகப்பெரிய கும்பல்கள் ஒன்றுசேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்துள்ளன. ஏற்கெனவே 11 பேரை காவலில் எடுத்து விசாரித்துள்ளோம். இன்னும் 3 பேரை விசாரிக்க வேண்டியுள்ளது. அனைவரும் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் கொலையின் மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை கண்டறிந்து கைது செய்வோம். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கட்சிகளில் இருந்து நீக்கம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணை செயலாளராக இருந்த மலர்கொடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல, தமாகா மாநில மாணவர் அணி துணை தலைவர் பதவியில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்ட ஹரிஹரன், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். போலீஸாரால் தேடப்பட்டு வரும் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x