Published : 19 Jul 2024 05:00 AM
Last Updated : 19 Jul 2024 05:00 AM

புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப்படம்

சென்னை: புதிய மாநகராட்சிகளை உருவாக்க வருவாய் மற்றும் மக்கள்தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட 4 சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள்தொகை, வருமான அளவுகளை குறைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நகர்ப்புற உள்ளாட்சி திருத்தசட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள்தொகையாக இருந்த3 லட்சம் என்பது 2 லட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துகள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல, சென்னையில், தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள், வாரியத்தின் கழிவுநீர் பாதை இருக்குமானால், அந்த வளாகத்தின் உரிமையாளர் அல்லதுகுடியிருப்பவர், தனியார் தெருவின் உரிமையாளர், கழிவு நீரை வாரியத்தின் கழிவுநீர் பாதையில் வெளியேற்றுவதற்காக இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை குடிநீர்வாரிய விதிகளில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், சென்னை மாநகர காவல் சட்டத்தை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.

இந்நிலையில், இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து,இந்த சட்டத் திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி5 நாள் பயணமாக கடந்த 15-ம் தேதிடெல்லி சென்றார். அங்கு பிரதமர்மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். பல்வேறு அலுவல்களை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக, நேற்று மாலையே டெல்லியில் இருந்து அவர் சென்னை திரும்பினார்.

ஆளுநரின் பதவிக் காலம் நீட்டிப்பா? மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர் 5 ஆண்டுகள் அப்பதவியில் இருக்கலாம். அதன்பிறகு, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை அவரதுபதவி நீட்டிக்கப்படலாம், அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் இந்தமாத இறுதியில் நிறைவடைகிறது. இதையடுத்து, அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x