Published : 19 Jul 2024 07:46 AM
Last Updated : 19 Jul 2024 07:46 AM

தமிழகத்தில் மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம் உயர்வு

கோப்புப்படம்

சென்னை: தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15-ம் தேதி முதல், புதிய இணைப்பு கட்டணம், மீட்டருக்கான வைப்புத் தொகை, பதிவு, மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றுக்கான சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, வீட்டு உபயோகம், குடியிருப்புகளுக்கான பொது மின்உபயோகம், அரசு கட்டிடங்கள், விசைத்தறி, தொழில் பிரிவுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.1,020 ஆக இருந்த கட்டணம் ரூ.1,070 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.1,535 ஆக இருந்தகட்டணம் ரூ.1,610 ஆகவும், 50கிலோவாட் முதல் 150 கிலோவாட் வரையிலான பயன்பாட்டுக்கு ரூ.2,045 ஆக இருந்த கட்டணம்ரூ.2,145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உயர் மின்அழுத்த இணைப்புகளுக்கான மீட்டர் வாடகை ரூ.3,780-ல் இருந்து ரூ.3,965 ஆக உயர்ந்துள்ளது.

மீட்டர், மின் இணைப்பு பெட்டிபழுது, இணைப்பை வேறு இடத்துக்கு மாற்றுதல் ஆகியவற்றை பொருத்தவரை, ஒருமுனை இணைப்புக்கு ரூ.1,020-ல் இருந்து ரூ.1,070 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.1,535-ல் இருந்துரூ.1,610 ஆகவும், 50 கிலோவாட் முதல் 150 கிலோவாட் வரையிலானபயன்பாட்டுக்கு ரூ.2,045 என்பது ரூ.2,145 ஆகவும், உயர் மின்அழுத்த இணைப்புக்கு ரூ.4,085 என்பது ரூ.4,280 ஆகவும் உயர்ந்துள்ளது.

மீட்டருக்கான டெபாசிட் தொகை, ஒருமுனை இணைப்புக்கு ரூ.765 ஆக இருந்தது ரூ.800ஆகவும், மும்முனை இணைப்புக்கு அதன் திறன் வாரியாக, ரூ.2,045, ரூ.7,050, ரூ.8,480 என இருந்த தொகை, ரூ.2,145, ரூ.7,390,ரூ.8,890 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் ஒருமுனை இணைப்புக்கு ரூ.5,315 என இருந்தது ரூ.5,570 ஆகவும், மும்முனை மீட்டருக்கு ரூ.7,255, ரூ.8,430 என இருந்த வைப்புத் தொகை ரூ.7,605, ரூ.8,835 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மறு இணைப்புக்கு ரூ.125, ரூ.305, ரூ.510 என இருந்த கட்டணங்கள், ரூ.130, ரூ.320, ரூ.535 என உயர்த்தப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்துக்கான கட்டணம் குறைந்த அழுத்த இணைப்புக்கு ரூ.615-ல்இருந்து ரூ.645 ஆகவும், உயர் மின்அழுத்த இணைப்புக்கு ரூ.6,130-ல் இருந்து ரூ.6,425 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல, மேம்பாட்டு கட்டணமும் மின்கம்ப இணைப்புக்கு ரூ.100 முதல் ரூ.160 வரையும், கேபிள் வழியான இணைப்புக்கு ரூ.245 முதல் ரூ.345 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வைப்புத்தொகை ரூ.15 முதல் ரூ.35 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x