Published : 18 Jul 2024 04:55 PM
Last Updated : 18 Jul 2024 04:55 PM
சென்னை: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று (ஜூலை 18) மாலை ஆலோசனை நடைபெற்றது.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், சிபிஐ விசாரணையும் கோரியுள்ளனர். இ்ந்நிலையில், சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருவதுடன், இந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள பலரையும் கைது செய்து வருகின்றனர். இதுதவிர, மதுரையிலும் தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்பவர்களும் தொடர்ந்து கைதாகி வருகினறனர்.
இந்நிலையில், தமிழக உள்துறை செயலராக இருந்த பி.அமுதா மாற்றப்பட்டு தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். இந்த சூழலில், இன்று தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், உளவுத் துறை ஐஜி செந்தில் வேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம், கொலை, கொள்ளைச் சம்பவங்கள், போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. சென்னை மாநகர காவல் ஆணையர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்முறையாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT