Published : 18 Jul 2024 04:29 PM
Last Updated : 18 Jul 2024 04:29 PM
திண்டுக்கல்: “காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக போராடவும் தயாராக உள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்” என திண்டுக்கல்லில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைமணிகண்டன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ரசூல் மொகைதீன், மச்சக்காளை, மேற்கு மாவட்ட த்தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேஷ்குமார் எம்எல்ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “பொன்னாடைகள் அணிவிப்பதை தவிர்க்கவேண்டும். நாம் ஒருவருக்கொருவர் புகழ்ந்துகொண்டு இருக்கக்கூடாது. பொன்னாடை அணிவிப்பதை தவிர்த்தால் தான் நாம் காமராஜர் ஆட்சி அமைக்கமுடியும். ராணுவக் கட்டுப்பாட்டோடு காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்படவேண்டும்” என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், கட்சியைப் பலத்தப்படுத்தவும் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை வெளியில் கொண்டுவரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். சரியான திசையில் விசாரணை சென்று கொண்டுள்ளது என தெரிகிறது.
பாஜக மகளிரணி தலைவியை போலீஸார் தேடுவதாக தகவல் வருகிறது. விசாரணை முடிந்தபிறகு இது குறித்து பேசலாம். இந்த கொலையின் பின்புலம் யார் என்பதை கண்டறிய வேண்டும். அதைத்தான் காவல்துறை விசாரித்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் யார் குறித்தும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து தாக்குதல் நடத்தியதில்லை.
ஆனால், தமிழகத்தில் புதிதாக அவதாரம் எடுத்துள்ள தலைவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கிறார், காலமாகிவிட்ட தலைவர்களை விமர்சிக்கிறார். தற்போது நீதியரசர் சந்துருவை விமர்சிக்கிறார். எந்த ஒரு தலைவரும் இதுபோல் கீழ்தரமான அரசியல் செய்ததில்லை. தற்போது மிரட்டல், உருட்டல் அரசியல் நடக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் இதற்கு அஞ்சப்போவதில்லை.
காவிரி வழக்கின் தீர்ப்பு, வழிகாட்டுதல் குழுவின் முடிவை கர்நாடக அரசு மதிக்கவேண்டும். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கக்கூடாது என்பதில் தமிழக காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக போராடவும் தயாராக உள்ளோம்.
நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். ஆனால், கர்நாடகாவைச் சேர்ந்தவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கி சித்துவிளையாட்டுக் காட்டுகிறது பாஜக.
உதய் மின் திட்டம் தான் மின் கட்டண உயர்வுக்குக் காரணம். தமிழக மக்கள் மீது சுமையை ஏற்றவேண்டாம். மின்கட்டணத்த வாபஸ்பெற கேட்டுக்கொண்டுள்ளோம். சசிகலா சுற்றுப்பயணம் என்பது அவரது அரசியல் பிரவேசப் பயணம். அது அவர்களின் கட்சி பிரச்சினை.
இதுகுறித்து பேச விரும்பவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் இருந்தது. தமிழகத்தில் சமூகநீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என கூறப்படும் கட்சியினர் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள் தான் இதுகுறித்து மத்திய அரசைக் கேட்கவேண்டும்.
எமர்ஜென்சி குறித்து வருத்தம் தெரிவித்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இது தான் தலைமைப் பண்பு. நாட்டில் பத்து ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடக்கிறது. முதலமைச்சர்களையே சிறைப்படுத்துகிறார்கள். தினம் தினம் எமர்ஜென்சியை பார்க்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT