Published : 18 Jul 2024 03:36 PM
Last Updated : 18 Jul 2024 03:36 PM
மதுரை: “அதிகாரம் கையில் இருந்த போது நீங்கள் சார்ந்த சமூகத்துக்கு என்ன செய்தீர்கள்?” என்று சசிகலாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழக்கும் நிகழ்ச்சி சமயநல்லூரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக செயல்பட்டேன் என்று சசிகலா தனக்குத்தானே பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்துகிறார்.
அப்படியென்றால், காலமும், அதிகாரமும் கையில் இருந்தபோது, தமிழக மக்களுக்கு என்ன செய்தீர்கள்? நீங்கள் சார்ந்த சமூகத்துக்கு என்ன செய்தீர்கள்? உங்களைச் சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்திருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள்? உங்களுக்கு இருக்கும் பணத்தை வைத்து, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்தப் பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. இவர்கள் இருந்தால் தான் அதிமுக வெற்றி பெறும் என்பது கற்பனைக் கதை. மக்கள் நினைத்தால்தான் வெற்றி பெறமுடியும்.
காளிமுத்து கூறியது போல, கறந்த பால் மடி புகாது; கருவாடு மீன் ஆகாது. அதேபோல் சசிகலாவை யாரும் விரும்பவில்லை. அதிமுக தொண்டர்கள் கவனமுடன், விழிப்புடன், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சமுதாய பின்புலத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர இந்த மக்களுக்கு ஒரு செம்பு தண்ணீர்கூட கொடுக்கவில்லை சசிகலா. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் நம்பிக்கையான தளபதிகளாக இருந்த எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசர், கருப்பசாமி பாண்டியன், காளிமுத்து, அழகு திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, துரைராஜ், பரமசிவம், நயினார் நாகேந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பல அதிமுக மூத்த முன்னோடிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்?
ஜெயலலிதா காரணம் இல்லை. இன்றைக்கு ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாதான் காரணம். ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலாப் பயணம் சென்று இருக்கிறார். காலமும் அதிகாரமும் கையில் இருந்தபோது, ஏழை எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த 2021 தேர்தலில், அரசியலில் விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் எனக் கூறிய சசிகலா, தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என்கிறார். இதில் எதை ஏற்றுக் கொள்ளவது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT