Published : 18 Jul 2024 11:07 AM
Last Updated : 18 Jul 2024 11:07 AM

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: அண்ணா பேச்சைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” என முடிக்கிறார்.

தமிழ்நாடு நாள் உருவான வரலாறு: மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று தொடர் உண்ணாவிரதம் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார் 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி உயிர்நீத்தார்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 1957-ல் கொண்டுவந்த தீர்மானம் வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. 1961-ம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கொண்டு வந்த தீர்மானமும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் குப்தாவின் தனிநபர் மசோதாவும், 1963-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மற்றொரு தீர்மானமும் தோல்வி கண்டது.

1967-ம் ஆண்டு அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற பின் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1968-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, 1968 நவ.23-ம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது.

1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது. ஜூலை 18-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மான நாளைக் கொண்டாட வேண்டும் என்று 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x