Published : 18 Jul 2024 10:24 AM
Last Updated : 18 Jul 2024 10:24 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அதிமுகவிலிருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் (இடது), அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள மலர்கொடி (வலது)

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்களான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி, செம்பியத்தை சேர்ந்த ஹரிகரன், திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், மலர்கொடியின் கணவர் பிரபல தாதாவாக வலம் வந்தவர் எனக் கூறப்படுகிறது. இதேபோல் சதீஷ் திமுக நிர்வாகி ஒருவரின் மகன் என்றும் கூறப்படுகிறது.

மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம்: இதற்கிடையில், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரை சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் ) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x