Published : 18 Jul 2024 05:15 AM
Last Updated : 18 Jul 2024 05:15 AM
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டாவது நீதிபதியாக, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்றம் செல்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பதவி வகித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இரண்டாவது நீதிபதியாக தமிழகத்தில் இருந்து ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்றம் செல்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் டெல்லி பார் கவுன்சிலில் இருந்து உச்ச நீதிமன்றம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வரும் 2027-ம் ஆண்டு வரையிலும், நீதிபதி ஆர். மகாதேவன் வரும் 2028-ம் ஆண்டு வரையிலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகிப்பர். இருவருமே தமிழ் இலக்கிய பற்றாளர்கள், கவிதை நயமிக்க சொற்பொழிவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த 10.06.1963-ம் ஆண்டு பிறந்தார். நங்கநல்லூர் நேரு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், ஜெயின் கல்லூரியில் பட்டப்படிப்பையும், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்து கடந்த 1989-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.
தனது 24 ஆண்டுகால வழக்கறிஞர் பணியில் சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் முதுநிலை வழக்கறிஞராகவும் பணியாற்றி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார்.
கடந்த 25.10.2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆர். மகாதேவன், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
அரசுக்கு 75 கட்டளைகள்: கடந்த 11 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற நீதிபதியாக சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை பிறப்பித்துள்ளார். குறிப்பாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியமிக்க புராதன சின்னங்கள், பழமையான கோயில்கள், கோயில் சொத்துக்கள், நகைகள் பாதுகாப்பு மற்றும் சிலை திருட்டு வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு தலைமை வகித்த இவர், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு 75 கட்டளைகளை பிறப்பித்திருந்தார்.
தமிழகத்தில் இருந்து கொள்ளையடித்து செல்லப்பட்ட பழமையான கோயில் சிலைகளை தமிழகத்துக்கு மீட்டெடுத்து கொண்டு வந்தது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுத்தது, பெண்களுக்கான சமத்துவ உரிமை, மதம் மற்றும் சமயம் சார்ந்த வழக்குகளில் அரசியலமைப்பு சட்டம் சார்ந்த உரிமைகள், திருக்குறளை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்த்து நன்னெறி போதிக்க வலியுறுத்தியது என இவரது பங்களிப்பு அளப்பரியது. இவரது தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு திருக்குறள் தற்போது மலேசிய நாட்டின் பாடத்திட்டத்திலும் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு, நடுவர் மன்றம், அரசியலமைப்பு, தொழிலாளர் மற்றும் சேவை சட்டம், வரி விதிப்பு போன்ற பொதுநல வழக்குகளிலும் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். சட்டப்பணிகள் ஆணைக்குழு உட்பட சென்னை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு கமிட்டிகளுக்கு தலைமை வகித்து நீதி மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு மறு சீரமைப்புகளை கொண்டு வந்துள்ளார்.
இவரது தந்தை மா.அரங்கநாதன் கவிதை, சிறுகதை, நாவல், கதைகள் என தமிழ் இலக்கிய உலகுக்கு புதிய பரிணாமங்களை, நவீனத்தை, வாழ்வியலை அளித்த தனித்துவ படைப்பாளி. தந்தை வழியில் நீதிபதி ஆர்.மகாதேவனும் தமிழ் இலக்கிய, இலக்கண உலகுக்கும், வரலாற்று காப்பியங்களுக்கும் தனது பங்களிப்பை செவ்வனே ஆற்றி வருகிறார்.
ஆண்டுதோறும் தந்தையை நினைவு கூறும் வகையில் `முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில் தந்தையின் பெயரி்ல் விழா எடுத்து தமிழ் ஆளுமையில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு இலக்கிய விருதுகளுடன், ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...