Published : 18 Jul 2024 04:36 AM
Last Updated : 18 Jul 2024 04:36 AM
சென்னை: முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். அதற்கு முன்பு, நிர்வாக ரீதியாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜூலை மாதம் அமெரிக்கா செல்வதாக கூறப்பட்டது. ஆனால், அரசு நிகழ்ச்சிகள், சுதந்திர தின விழா ஆகியவற்றில் பங்கேற்ற பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் வகையில் முதல்வரின் பயண திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2022 டிசம்பர் 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போதிருந்தே அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என்ற பேச்சு அவ்வப்போது எழுந்து வருகிறது.
இதற்கிடையே, மக்களவை தேர்தல் முடிந்ததும் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால், அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு, விரைவான பொருளாதார வளர்ச்சி, திட்டங்களின் செயல்பாடுகளை துரிதப்படுத்துதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு, அரசு துறைகளின் செயலர்கள், இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 16-ம் தேதி ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவம், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதேபோல, முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு முன்பு, தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT