Published : 17 Jul 2024 06:38 PM
Last Updated : 17 Jul 2024 06:38 PM
மதுரை: “திமுக ஆட்சியில் இதுவரை மதுரைக்கு 2 நூலகங்களும், ஒரு ஜல்லிக்கட்டு அரங்கமும் தான் கொண்டு வந்துள்ளார்கள். அதுவும், கருணாநிதி பெயரை பொறிக்கவே இந்த திட்டங்களையும் கொண்டு வந்தார்கள். மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இந்த நகருக்கு எந்தப் பயனும் இல்லை,” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.
மதுரை கோச்சடையில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்ட பல்வேறு பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ இன்று தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “10 ஆண்டுகள் நான் அமைச்சராக இருந்து மதுரையில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். ஸ்மார்ட் சிட்டி, பறக்கும் பாலம் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். இன்னும் 50 ஆண்டுகளுக்கு மதுரையில் குடிநீர் பிரச்சினையே இல்லை என்கிற நிலையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து ரூ.1,296 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கான பணிகள் ஆமைவேகத்தில் நடக்கிறது. இப்பணிகளை விரைந்து முடித்து 100 வார்டுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தையும் அதன் அமைச்சரையும் கேட்டுக் கொண்டுள்ளேன்.மதுரையில் கொலைகள் அடிக்கடி நடக்கிறது. அதுவும் நடைப்பயிற்சி செல்லும் நேரத்தில்தான் இந்தக் கொலைகள் நடக்கிறது. ஏற்கெனவே தா.கிருஷ்ணன் இதுபோல நடைப்பயிற்சி சென்றபோதுதான் கொலை செய்யப்பட்டார். அவர் திமுக அமைச்சராக இருந்தவர். அவருக்கே அந்த நிலை ஏற்பட்டது.
அவரை யார் கொன்றார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. திமுக ஆட்சியில் கொலையாளிகள் மறைக்கப்பட்டார்கள். அதனால், மதுரை சாலைகளில் நடைப்பயிற்சி செல்லவே பயமாக இருக்கிறது. சமீப காலமாக அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கவனமாக இருங்கள். சாலைகளில் நடைப்பயிற்சி செல்லாதீர்கள். பிறகு, இடைத் தேர்தல் வந்துவிடும். அந்த இடத்திலும் திமுகவினர், திராவிட மாடல் என்று கூறி ஜெயிச்சிட்டோம் என்று கூறிவிடுவார்கள்.
மதுரை என்றாலே அது அதிமுகவின் கோட்டை. ஆர்ப்பாட்டம், போராட்டம் சிறப்பாக நடத்தப்படும். அந்த வகையில் தற்போது மின்கட்டணம் உயர்வு, அரசியல் படுகொலைகளைக் கண்டித்து அதிமுக சார்பில் வருகிற 23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் மட்டுமில்லாது பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் இதுவரை மதுரைக்கு 2 நூலகங்களும், ஒரு ஜல்லிக்கட்டு அரங்கமும் தான் கொண்டு வந்துள்ளார்கள். அதுவும், கருணாநிதி பெயரை பொறிக்கவே இந்த திட்டங்களையும் கொண்டு வந்தார்கள். மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இந்த நகருக்கு எந்தப் பயனும் இல்லை.
மக்களவைத் தேர்தலில், உங்களுக்குத் தான் ஒட்டு, உங்களுக்குதான் ஓட்டு என்று மக்கள் கூறினர். மதுரை அதிமுக கோட்டையாகவும் இருப்பதால் வெற்றிபெறுவோம் என்று நம்பினோம். எங்கள் வேட்பாளர் சரவணனையும் வானத்துக்கும் பூமிக்கும் புகழ்ந்தோம். ஆனாலும் மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள். ஆனால், சட்டமன்ற தேர்தல் இதுபோல் நடக்காது. இந்த திமுக ஆட்சியை அகற்ற அதிமுகவை மக்கள் ஆதரிப்பார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...