Published : 17 Jul 2024 02:45 PM
Last Updated : 17 Jul 2024 02:45 PM
சென்னை: டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து தமிழகம் தொடர்பாக விவாதித்தார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு 3-வது முறையாக பதவியேற்றுள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக ஜூலை 15-ம் தேதி டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவர், நேற்று (ஜூலை 16) பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரைச் சந்தித்து தமிழகம் தொடர்பாக பேசினார்.
தொடர்ந்து, இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு நிலவரம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை மற்றும் அது தொடர்பான அடுத்த கட்ட நிகழ்வுகள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் இறந்த விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து ஆளுநர் வெளியிட்ட எக்ஸ் தளபதிவில், ‘மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழல்கள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டேன். நம் மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும், அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவர் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தார். அப்போது, நீட்தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், தமிழகத்துக்கு நீட்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முன்னதாக, தமிழகத்துக்கு நீட் விலக்கு கோரி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தப்பட்டது குறித்தும், தமிழகத்தில் உயர் கல்விச்சூழல் குறி்த்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து ஆளுநர் தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தமிழகத்தில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் குறித்து விவாதித்தேன். திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு மிகவும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT