Published : 17 Jul 2024 01:15 PM
Last Updated : 17 Jul 2024 01:15 PM

700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு தக்கார் நியமனம் செல்லும்: சென்னை ஐகோர்ட்

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு தக்காரை நியமித்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நெற்குன்றத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள திருவாலீஸ்வரர் - திரிபுரசுந்தரி கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையால் தக்கார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ரவி கே.விஸ்வநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், பழமையான இந்தக் கோயில் மற்றும் அதன் சொத்துக்கள் அனைத்தும் தனது தாத்தா நீலமேகம் பிள்ளை என்பவரால் கடந்த 1941-ம் ஆண்டு கிரயப்பத்திரம் மூலம் வாங்கியவை என்பதால், இந்தக்கோயில் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது என்றும், அறநிலையத் துறை இக்கோயிலில் நிர்வாகம் செலுத்த முடியாது என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பாக இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆஜராகி அந்தக் கோயில் செயல் அலுவலர் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தார். மேலும் அவர் வாதிடுகையில், “நெற்குன்றத்தில் உள்ள திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோயில் 700 ஆண்டுகள் பழமையானது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. இதை அறநிலைய துறை தொல்லியல் துறை ஆய்வாளர் ராமமூர்த்தி உறுதி செய்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி 700 ஆண்டுகள் பழமையான கோயிலை கிரையப்பத்திரம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியாது.மேலும், தாத்தா பேரனுக்கு எவ்வாறு கிரையப்பத்திரம் எழுதி வைத்தார் என்பது தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதையேற்ற நீதிபதி பவானி சுப்பராயன், திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோயிலுக்கு நியமிக்கப்பட்ட தக்கார் நியமனம் செல்லும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x