Published : 16 Jul 2024 07:13 PM
Last Updated : 16 Jul 2024 07:13 PM
சென்னை: வங்கி ஆவணங்களை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, கரூர் சிட்டி யூனியன் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, அந்த வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜிக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த ஆவணங்களை பெறுவதற்காக புழல் சிறையில் இருந்து இன்று அழைத்துவரப்பட்ட செந்தில் பாலாஜி முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி கவரிங் லெட்டர் உள்ளிட்ட ஆவணங்களை செந்தில் பாலாஜி கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டார். பின்னர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், “இந்த வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களை தடய அறிவியல் துறையின் சோதனைக்கு அனுப்பி, அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும்,” என்று கோரப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி அல்லி, விசாரணையை ஜூலை 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT