Published : 16 Jul 2024 07:51 PM
Last Updated : 16 Jul 2024 07:51 PM

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்று மாதாந்திர கணக்கீட்டு முறையை கொண்டுவர மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்

சென்னை: “மின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். புதிய மின் உற்பத்தி திட்டங்களை அரசே செயல்படுத்தி குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்வதுதான் தமிழகத்துக்கு தேவையான மின் கொள்கையாகும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மீண்டும் 4.83 சதவீதம் கூடுதல் மின் கட்டணம் மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ள இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மத்திய அரசின் மின்சார சட்டம் மற்றும் உதய் மின் திட்டம் ஆகியவை மின்சார வாரியத்தின் சேவை நோக்கத்தை முற்றிலுமாக அழித்து, தனியார் கொள்ளைக்கு மாற்றும் திட்டம் கொண்டவை.

மின் வாரியத்தின் கடன் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, பல்வேறு நிபந்தனைகளை ஏற்கவேண்டுமென வெளிப்படையான நிர்ப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொள்கிறது. இப்போதும், ஆர்.டி.எஸ்.எஸ் திட்டத்தில் மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு கட்டண உயர்வு கட்டாயம் என்பதை மின் வாரியம் தனது விளக்கத்தில் முன்வைத்துள்ளது. புதிய மின் உற்பத்தி திட்டங்களை அரசே செயல்படுத்தி குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்வதுதான் தமிழகத்துக்கு தேவையான மின் கொள்கையாகும். ஆனால் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவது, அதனால் கூடுதல் கட்டணம் விதிப்பது அல்லது கடன் வாங்குவதன் மூலம் அந்த நெருக்கடியை சமாளிப்பது என்ற முறையில் மின் வாரியம் தமிழக மக்களுக்கு சுமையை ஏற்றுகிறது.

உதாரணமாக, 2022-23 ஆம் ஆண்டில் மின் கட்டண உயர்வால் 7 மாதங்களில் மின்வாரியம் ஈட்டிய தொகை ரூ. 12,550 கோடி ஆகும். அதே காலகட்டத்தில் மின்வாரியம் தனது கடனுக்கான வட்டியாக ரூ. 13,450 கோடி செலுத்தியுள்ளது. செலவுகளை பார்க்கும்போது மொத்த வருமானம் ரூ.82,399 கோடியில், சுமார் ரூ.51 ஆயிரம் கோடியை மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிட்டிருப்பதாக தெரிய வருகிறது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் கூடுதல் தொகையெல்லாம் தனியாருக்கு லாபத்தை கொட்டிக் குவிக்கவே உதவும் ; மின்வாரிய வளர்ச்சிக்கு உதவாது. இது தவிர, பாஜக ஆட்சியில் வரும் மறைமுக அழுத்தங்கள், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அதானியின் தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலையில் நம் தலையில் கட்டியதும், அதனால் ஏற்பட்ட கூடுதல் செலவினங்களை வட்டியோடு சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் மின்வாரியத்துக்கு ஏற்பட்டதையும் அண்மை செய்திகள் அம்பலப்படுத்தின.

இதே காலகட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை கம்பெனிகளாக பிரிப்பது, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது ஆகிய கொள்கை முடிவுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இந்த முடிவுகளும் வரும் ஆண்டுகளில் கூடுதலான மின்கட்டண உயர்வுக்கும் தனியார் சுரண்டலுக்கும் வழிவகுக்கும்.தனியார்மயப் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டு, கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பது மேலும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கான சுமைகளை தமிழ்நாடு மக்களின் மீது திணிப்பது சரியல்ல. சுமார் 1 கோடி மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இருக்காது என்றாலும், வீட்டு இணைப்புகளுக்கு சில பைசாக்கள் என்ற அளவில்தான் உயர்வு இருக்கும் என மின்சார வாரியம் சில விளக்கங்களை முன்வைத்துள்ளதை பார்க்கும்பொழுது, இரு மாதங்களுக்கு 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு பெரும் சுமையாக மாறும் என்பதை உணர முடிகிறது.

வணிக இணைப்பாக இருந்தாலும், சிறு குறு தொழில்களுக்கான இணைப்பாக இருந்தாலும் அந்தச் சுமையை ஏதோ ஒரு வகையில் மக்களேதான் சுமக்க நேரிடும் என்பதையும், சிறு உற்பத்திப் பொருட்களின் விலையில் இந்தச் சுமை ஏற்றப்பட்டால் சந்தையில் போட்டிச் சூழலில் தமிழக நிறுவனங்கள் பின்தங்கும் என்பதையும் தமிழக அரசு கணக்கிலெடுக்க வேண்டும். மத்திய அரசின் தனியார்மய சூழ்ச்சித் திட்டத்தை பின்னுக்குத் தள்ளுவதுடன், கடந்த காலங்களில் ஊழல் முறைகேடுகளால் ஏற்றப்பட்ட கடன் சுமையை, அதற்கு காரணமான அதானி உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்தே அபராதத்துடன் வசூலித்து அரசு கருவூலத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுவதுடன் மாதாந்திர மின் கணக்கீட்டை அமலாக்க வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x