Published : 16 Jul 2024 07:49 PM
Last Updated : 16 Jul 2024 07:49 PM

போலீஸ் தடையை மீறி தி.மலை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்!

திருவண்ணாமலை: விண்ணப்பித்து ஓராண்டாக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக உதவித்தொகையை வழங்கக் கோரி போலீஸ் தடையை மீறி, மாற்றுத் திறனாளிகள் இன்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வருவாய் துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1,500, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2 ஆயிரம் - இவற்றைக் வழங்க வலியுறுத்தியும் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பணி வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் அறிவித்தப்படி, மாநிலத் துணைத் தலைவர் சி.ரமேஷ் பாபு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றத் திறனாளிகள், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் திரண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தங்களது கோரிக்கையை ஆட்சியரிடம் தெரிவிக்க, அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் தடையை மீறி ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதியை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 3 மாற்றுத் திறனாளிகளை டோலியில் சுமந்து ஆட்சியரிடம் ஒப்படைக்கச் சென்றனர்.

இது குறித்து சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சி.ரமேஷ்குமார் கூறும்போது, "வருவாய்த் துறை மூலமாக பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு வகையான உதவித் தொகை கேட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றனர்.

வருவாய்த் துறையின் பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணையை பெற்று, பணம் கிடைக்காமல் 300-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் இப்படிக் காத்திருக்கின்றனர். விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து பணி வழங்குவது இல்லை.

ஊராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. இதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு கட்டணத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து பணி வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ரமேஷ்குமார் கூறினார்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முழக்கமிட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இரா.சிவாஜி, மாவட்ட பொருளார் ப.சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர். பின்னர், ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், "உதவித் தொகையை வழங்குவது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார். இதையடுத்து 3 மணி நேர முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு மாற்றுத் திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x