Published : 16 Jul 2024 06:59 PM
Last Updated : 16 Jul 2024 06:59 PM
மதுரை: “நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி கேட்கும் ஆவணங்களை ஜூலை 18-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்” என நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த தருண்மோகன் கைதானார். இவர் தன் மீதான ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீட் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் விவரங்களை தராமல் தேசிய தேர்வு முகமை இழுத்தடித்து வருவதாக சிபிசிஐடி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “சிபிசிஐடிக்கு இதுவரை ஆவணங்களை தர மறுப்பதால், ஆள்மாறாட்டத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் உடந்தையாக உள்ளார்களா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இனிமேல் தாமதப்படுத்தினால் தேர்வு முகமை அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனையிடவும், கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய தேர்வு முகமை சார்பில், “சிபிசிஐடி போலீஸார் கேட்ட ஓஎம்ஆர் சீட் விபரங்கள் 2023-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக ஊடகங்களில் பலவிதமாக செய்திகள் பிரசுரிக்கப்படுகிறது. இதற்கு கடிவாளம் போட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, “இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. 5 ஆண்டுகளாக விசாரணை மந்தமாக செல்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு ஆவணங்களை கேட்டு எழுத்துபூர்வமாக மனு அனுப்பியிருக்கலாம் அல்லது நீதிமன்ற உதவியை நாடியிருக்கலாம்.
எதுவும் செய்யாமல் விசாரணை காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் நேர்மையான அதிகாரியை விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி நியமிக்க வேண்டும். சிபிசிஐடி கேட்கும் ஆவணங்களை தேசிய தேர்வு முகமை ஜூலை 18-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிபிசிஐடி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT