Last Updated : 16 Jul, 2024 06:12 PM

 

Published : 16 Jul 2024 06:12 PM
Last Updated : 16 Jul 2024 06:12 PM

குமரியில் கனமழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு

குமரியில் பெய்து வரும் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கெனவே சாரல் மழை பெய்த நிலையில் இன்றும் பரவலாக மழை பெய்தது. குமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் சாரல் மழை கொட்டியது. மழையால் வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி கடல் பகுதியில் பெரும்பாலான விசைப் படகுகள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. மேலும், குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்திருக்கிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து 516 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மதகு வழியாக 582 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 1,145 கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. விநாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வரை வெளியேறி வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது. அணைக்கு 841 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 360 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. மழையால் குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழில், தென்னை சார்ந்த தொழில், கட்டிட தொழில், மீன்பிடி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தென்னை, வாழை, நெல் விவசாயிகள் மழையை பயன்படுத்தி விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x