Published : 16 Jul 2024 11:17 AM
Last Updated : 16 Jul 2024 11:17 AM
சென்னை: “காவிரிப் பிரச்சனையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் கூறியிருப்பதாவது, “காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து கொள்வது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான உறவை சீர் செய்ய முடியாத அளவுக்குப் பாழாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.
கடந்த ஆண்டும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரில் பாதியைக்கூட கர்நாடகம் அளிக்கவில்லை. இந்த ஆண்டு தமிழகத்துக்கு தண்ணீர் தரும் அளவுக்குக் கர்நாடக அணைகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தண்ணீர் தர வாய்ப்பு இல்லை என்று கூறுவது கர்நாடக அரசின் சுயநலம்சார்ந்த பிடிவாதப் போக்கையே காட்டுகிறது.
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தேசிய கட்சிகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு சாதகமாகப் பேசுவது அவர்களுக்குத் தற்காலிகமாக விமர்சனங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியைத் தரலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இந்திய கூட்டாட்சிக்கு அது மிகப்பெரிய கேடாகவே அமையும். இந்திய கூட்டாட்சியை பாதுகாப்பதில் மாநில கட்சிகளைப் போலவே காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை தோழமையோடு சுட்டிக் காட்டுகிறோம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு -263, மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அவற்றை தீர்த்துக் கொள்வதற்கு மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் (Inter State Council ) ஒன்றை அமைப்பதற்கு வழி செய்து உள்ளது. சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைப்படி 1990 இல் அந்த கவுன்சில் அமைக்கப்பட்டது. ஆனால், அது முறையாகக் கூட்டப்படுவதில்லை. ஆண்டொன்றுக்கு மூன்று முறை அந்தக் கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று விதி இருந்தாலும் அவ்வாறு நடத்தப்படுவதில்லை.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்று 2016ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே அந்தக் கூட்டத்தை நடத்தினார். அதன் பிறகு கடந்த 8 ஆண்டுகளில் அந்தக் கூட்டம் கூட்டப்படவே இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு இது குறித்து 2022ம் ஆண்டில் கடிதம் எழுதி வலியுறுத்தினார். அதற்கும் பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. அந்தக் கூட்டம் முறையாக கூட்டப்பட்டால் இத்தகைய நதிநீர்ப் பிரச்சினைகளை எளிதாகத் தீர்த்துக் கொள்ள முடியும்.
காங்கிரஸ் கட்சி இப்போது கூட்டாட்சி குறித்த தனது நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது பாராட்டத்தக்கதாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்வைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதற்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பட்டியலாக உள்ள ஒத்திசைவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் சில அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதைப் பற்றி அந்த வாக்குறுதிகளில் கூறப்பட்டிருந்தது.“இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என்பதன் அடிப்படையாக இருப்பது, கூட்டாட்சி என்னும் கோட்பாடாகும். ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையால் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு பாஜக மற்றும் என்டிஏ அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகிறது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இண்டியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மாநில கட்சிகளுக்குக் காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதிகள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின.
ஆனால், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழகத்தின் உரிமையைப் புறக்கணிக்கும் விதமாகவும், அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மதிக்காமலும் நடந்து கொள்வது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இந்தச் சூழலில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை உடனடியாக காவிரி நதிநீர் பிரச்சினையில் தலையிட்டு காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அளித்த உத்தரவின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசை அறிவுறுத்த வேண்டும். அத்துடன், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்த வேண்டும்.
கர்நாடகா, தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காலம் தாழ்த்தாமல் உடனடியாக காங்கிரஸ் தலைமை இதில் கவனம் செலுத்த வேண்டுமென இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்கிற முறையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பின்னணி: முன்னதாக, டெல்லியில் கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு 1 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டினார். அனைத்து கட்சி கூட்டத்தின் நிறைவாக பேசிய முதல்வர், “கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இந்த ஆண்டில் 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் 63 சதவீதம் மட்டுமே நிறைந்துள்ளன. ஆனாலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது. தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்ட நிலையில், நாங்கள் 8,000 கனஅடி நீரை திறக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு இன்று அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT