Published : 16 Jul 2024 08:43 AM
Last Updated : 16 Jul 2024 08:43 AM

மின் கட்டண உயர்வு ஏன்?- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அந்த விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விளக்க அறிக்கையின் விவரம் வருமாறு: கடந்த 2011-12 ஆண்டில் ரூ.18,957 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.96,712 கோடி மேலும் அதிகரித்து, 31.03.2021 வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்தது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இதன் விளைவாக, 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-22) வரை ரூ.1,59,823 கோடியாக மாறியது. இதன் விளைவாக, கடந்த 2011-12-ஆம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259% அதிகரித்து 2020-21-ஆம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்தது.

இவ்வாறு அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னார், அதிகமான மின்கட்டண உயர்வினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய சுமையினை கருத்தில் கொண்டு, இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது

ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெறுவதற்காக, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும்.

இந்த வகையில், 2022-23 நிதி ஆண்டிற்கான மின் கட்டண உயர்வானது. 01.04.2022 க்கு மாறாக 10.09.2022 முதல் சுமார் 7 மாதத்திற்கு மட்டுமே உயர்த்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல்லாண்டு மின் கட்டண வீத ஆணையின் படி கடந்த 01.07.2023 முதல் நுகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில், அனைத்து மின்னிணைப்புகளுக்கும் உயர்த்தப்பட்ட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மின் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வும் முழுவதுமாக இந்த அரசே மின் மானியம் மூலம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதினால் பொதுமக்களுக்கும். தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே மின் கட்டணத்தை உயர்த்தி 15.07.2024 தேதியிட்ட மின் கட்டண ஆணை எண்.6/2024 -ஐ வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடவே மின் கட்டண உயர்வின் முக்கிய அம்சங்களையும் பட்டியலிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.

1. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

2. வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன்படி. நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயன்அடைவர்.

3. தற்பொழுது குடிசை. விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரி வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

4. இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5 வரை மட்டுமே உயரும்.

5. இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 35 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிச ரூ.15/- வரை மட்டுமே உயரும்.

6. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25/- வரை மட்டுமே உயரும்.

7. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 13 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40/- வரை மட்டுமே உயரும்.

8. 2.19 இலட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு. குறைந்த
அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.

9. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றிற்கு 20 பைசா, 1501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 25 காசுகள் மட்டுமே உயரும்.

10. தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிக குறைந்த அளவில் யூனிட் ஒன்றிற்கு 35 காசுகள் மட்டுமே உயரும்.

11. 22.36 இலட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.15/- மட்டுமே உயரும்.

12. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு பைசா 35 மட்டுமே உயரும்.

13. உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா மட்டுமே உயரும்.

14. நிலையான கட்டணங்கள் (Fixed Charges) கிலோவாட் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.3 முதல் ரூ.27 வரை மட்டுமே உயரும். இவ்வாறு அந்த விளக்கக் குறிப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x