Published : 16 Jul 2024 05:23 AM
Last Updated : 16 Jul 2024 05:23 AM
சென்னை: ஐந்து நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மாதந்தோறும், அறிக்கை தயாரித்து உள்துறைக்கு ஆளுநர் அனுப்புவது வழக்கம். இதற்கிடையில், சமீபத்தில் சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். இவரது மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பாஜக கோரியுள்ளது.
முன்னதாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் இறந்தனர். கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தன. இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார்.
நேற்று காலை 11.25 மணிக்குசென்னையில் இருந்து விமானத்தில் மனைவி மற்றும் பேரனுடன்டெல்லி புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக ஆளுநர் சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் வழியாக செல்வார். பேரனுடன் வந்ததால், அந்த வாயிலை தவிர்த்து, 2-வது உள்நாட்டு புறப்பாடு முனையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆளுநர் தனது தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாஜக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை சந்திக்காத நிலையில், 5 நாள் பயணமாக சென்றுள்ளதால், இருவரையும் சந்தித்து தமிழக நிலவரம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்து கொண்டு 19-ம் தேதி அவர் சென்னை திரும்புவார் என ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT