Published : 16 Jul 2024 04:44 AM
Last Updated : 16 Jul 2024 04:44 AM

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்தது: 4.83% அதிகரிப்பு

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் டான்ஜெட்கோ நிறுவனம் கடந்த 2022-ல் மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக மக்களிடம் கருத்து கேட்ட ஆணையம், பணவீக்க விகித அடிப்படையில் மின்கட்டணத்தை ஆண்டுதோறும் மாற்றியமைக்க 2022 செப்.9-ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதை 2026-27 வரை தொடர்ந்து மாற்றியமைக்கவும், ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்த மாற்றத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 2022 செப்.9-ல் மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது. கடைசியாக, கடந்த ஜூன் 30-ம் தேதி கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 2024-25 ஆண்டுக்கான மின் கட்டணத்தை பணவீக்க விகித அடிப்படையில் மாற்றியமைத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, குடியிருப்புகளுக்கு 1 முதல் 400 யூனிட் வரை, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆகவும், 401-500 யூனிட் வரை ரூ.6.15-ல் இருந்து ரூ.6.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 501-600 யூனிட் வரை ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆகவும், 601-800 யூனிட் வரை ரூ.9.20-ல் இருந்து ரூ.9.65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 801-1000 யூனிட் வரை ரூ.10.20-ல் இருந்து ரூ.10.70 ஆகவும், 1000 யூனிட்டுக்கு மேல் ரூ.11.25-ல் இருந்து ரூ.11.80 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு வசதிகள், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தெருவிளக்கு, குடிநீர் விநியோகத்துக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது. விவசாய பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது.

நிலைக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.102-ல்இருந்து ரூ.107 ஆக உயர்ந்துள்ளது. கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x