Published : 15 Jul 2024 09:00 PM
Last Updated : 15 Jul 2024 09:00 PM

“100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது இல்லை” - கனிமொழி குற்றச்சாட்டு

கோவில்பட்டி பகுதியில் வாக்காளர்களைச் சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி நன்றி தெரிவித்தார்.

கோவில்பட்டி: “100 நாள் வேலைத்திட்டம் என்பது திமுக - காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது. கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு 100 நாளாவது வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். திமுகவும் காங்கிரசும் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை,” என்று திமுக எம்.பி, கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று (ஜூலை 15) குறுக்குச்சாலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து வேடநத்தம், குளத்தூர், கீழே வைப்பார், வேம்பார், சூரங்குடி, அரியநாயகிபுரம், விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம், சின்னவநாயக்கன்பட்டி, புதூர், சிவலார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியது: “உங்களில் ஒருவராக இருந்து உங்களுக்காக பணியாற்றுவேன் என உறுதியை வழங்குகிறேன். 100 நாள் வேலை என்பது உங்களின் நீண்ட நாள் கோரிக்கை.

தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி வழங்குவேன் என கூறியிருந்தார். அதேபோல் காங்கிரஸ் பேரியக்கமும் 100 நாள் வேலைக்கு ரூ.400 சம்பளம் என அறிவித்திருந்தனர். நீங்கள் சரியாக வாக்களித்து விட்டீர்கள். உங்களைத் தவறு சொல்ல முடியாது. ஆனால் மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் வாக்களிக்கவில்லை. அதனால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி தான் வந்துள்ளது. கடந்த முறையை விட குறைவாக வெற்றி பெற்றிருந்தாலும், வெற்றி பெற்றது அவர்கள் தான்.

100 நாள் வேலைத்திட்டம் என்பது திமுக - காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது. கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு 100 நாளாவது வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். திமுகவும் காங்கிரசும் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நாங்கள் ஒவ்வொரு முறையும் சண்டையிடுகிறோம். மக்களவையில் பிரச்சினையை எழுப்புகிறோம். மக்களவை நிலைக் குழு தலைவராக நான் இருந்துள்ளேன். நாங்களும் பலமுறை அறிக்கை அளித்து விட்டோம்.

இந்தியா முழுவதும் யாருக்கும் முழுமையாக 100 நாள் வேலையும் கிடைப்பதில்லை. அதில் சம்பளமும் முறையாக கிடைப்பதில்லை என தெரிவித்து விட்டோம். அதனால் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கூறிய பின்னரும், நிதி அமைச்சரும், பிரதமரும் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. அதனால்தான் 100 நாள் வேலை கொடுக்க முடியவில்லை. அவர்கள் ஆட்சியில் உள்ளனர். ஆனால் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை. அதனால் ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இந்த நாடு காத்திருக்கிறது.
தமிழக முதல்வர் எந்த வாக்குறுதி அளித்தாலும் நிறைவேற்றக்கூடியவர்.

அதேபோல் காங்கிரசும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 100 நாள் வேலை நிச்சயம் அதிகரித்து கொடுக்கப்படும். ஆனால், வரக்கூடிய பட்ஜெட்டிலாவது மோடி அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்தால் 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்குவோம்,” என்று அவர் பேசினார். அப்போது வேடநத்தம் கிராமத்தில் கூடியிருந்த பெண்கள்100 நாள் வேலை சரியாக கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., “100 நாள் வேலை மாநில அரசு கொடுக்க முடியாது. மத்தியில் நிதி ஒதுக்கினால் தான் வேலை வழங்க முடியும். நான் உங்களுக்காக மக்களவையில் கேள்வி எழுப்பி வருகிறேன். இதே கோரிக்கையை எல்.முருகன், அண்ணாமலை வரும்போது கேட்கவும்,” என்றார். அப்போது அவருடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x