Last Updated : 15 Jul, 2024 04:55 PM

1  

Published : 15 Jul 2024 04:55 PM
Last Updated : 15 Jul 2024 04:55 PM

“என்கவுன்ட்டர் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு” - திருமாவளவன்

திருமாவளவன் | கோப்புப் படம்

அரியலூர்: தமிழகத்துக்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் கர்நாடக அரசை வலியுறுத்துவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும், என்கவுன்ட்டர் கூடாது என்பது தான் தங்களது நிலைப்பாடு என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "இன்றைய தினம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 3 கி.மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி என கல்வியை தனது ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தியவர் காமராஜர். இன்று அகில இந்திய அளவில் தமிழ்நாடு கல்வித் தரத்தில் முன்னணியில் இருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு கல்வி கற்க வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு மகத்தானது என்பதை நன்றி பெருக்கோடு நினைவு கூறுகிறேன்.

பொதுவாக மரண தண்டனை கூடவே கூடாது என்பதுதான் விசிக-வின் கொள்கையாகும். சட்டபூர்வமாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு பதிலாக ஆயுள் தண்டனையாக வழங்கலாமே ஓழிய, மரண தண்டனை வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறோம். பொதுவாக என்கவுன்ட்டர் கூடாது என்பது எங்களது கருத்து. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி எனச் சொல்லக் கூடியவர் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், பொதுவாக என்கவுன்ட்டர் கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு.

தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் என இந்திய கூட்டணி சார்பில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்துகிறோம். இது மாநில உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. தமிழக அரசே அதை பார்த்துக் கொள்ளும் என வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் மத்திய அரசு இருக்கக்கூடாது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு என்ன ஆணையிட்டுள்ளதோ அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளது.

எனவே, காவேரி பிரச்சினை என்பது தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையிலான மாநில பிரச்சினையாக கருதி மத்திய அரசு அமைதி காக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீட் விலக்கு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இந்திய கூட்டணி கட்சி முதல்வர்கள் எல்லோருக்கும் கடிதம் எழுதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்." என திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x