Published : 15 Jul 2024 03:40 PM
Last Updated : 15 Jul 2024 03:40 PM

‘நெடுஞ்சாலையில் நடக்க இடமில்லை’ - ஆதங்கத்தில் பெரம்பூர் மக்கள்

பெரம்பூர் ரயில் நிலைய முகப்பு.

வடசென்னையின் பெரிய தொகுதி மற்றும் முக்கிய பகுதியாக பெரம்பூர் விளங்குகிறது. தொழில் நகரமாக இருந்து வரும் இப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அதேநேரம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பெரம்பூருக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றொருபுறம் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பெரம்பூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் கூடுதல் நடைமேடை அமைத்தல், கட்டிடம் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, ரயில் நிலையம் அமைந்துள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளுக்கு இடையே திணறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருவோர் பேருந்து நிலையம் செல்லவோ, அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்லும் வகையிலோ நடைபாதை அமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது தொடர்பாக பெரம்பூர் சுற்றுவட்டார மேம்பாட்டுக் குழுவின் அமைப்பாளர் ரகுகுமார் சூடாமணி கூறியதாவது: பெரம்பூர் நெடுஞ்சாலையில் ஏற்படும் நெரிசலுக்கு சாலை விரிவாக்கமும், ஆக்கிரமிப்பு அகற்றமுமே தீர்வாக இருக்க முடியும். குறுகிய சாலையில் ஆக்கிரமிப்பு என்பது மிகப்பெரும்பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக அனைத்து கடைகளுக்கும் வாகன நிறுத்தம் இல்லாததால், கடைகளின் வாயில்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

நடைபாதை இல்லாமல் வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படும்
பெரம்பூர் நெடுஞ்சாலை.

இதுவே போக்குவரத்துக்கு பெரியஇடையூறாக இருக்கிறது. வேடிக்கையான விஷயம் இதில் என்னவென்றால் நோ பார்க்கிங் வாசகத்துக்கு கீழேயே அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.

இந்த பெரம்பூர் நெடுஞ்சாலை என்பது 70 அடி சாலை. இப்போது பார்த்தால் அப்படியா தெரிகிறது? பெரம்பூர் ரயில் நிலையத்தை நாளொன்றுக்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். அவர்கள்தங்களது உடைமை, குழந்தைகளை கைகளில் பிடித்துக் கொண்டு சாலையில் நடக்க முடியாமல் திணறுகின்றனர். ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கும் நடைபாதையோ கழிப்பறையாகவே மாறிவிட்டது.

அருகில் செல்லமுடியாதவாறு துர்நாற்றம் வீசுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், அதில் ஏராளமான பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டு சேதமடைந்துவிட்டது. எதிர்புறமோ ஆக்கிரமிப்புக்கு இடையே நடக்கக் கூட பாதை இல்லை.

இதுபோன்ற சூழலில் பாதசாரிகள் நாள்தோறும் நடக்க வழியின்றி தவிக்கின்றனர். இதுதொடர்பாக மக்களைத் தேடி மேயர் திட்டம், முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் புகாரளித்தும் பயனில்லை. ஆனால், இங்குள்ள பூங்காவை சுற்றி நடைபாதை அமைத்து வருகின்றனர். அந்த பூங்காவை சுற்றி அதிகளவில் வாகனங்கள் மட்டுமே செல்லும். எங்கு தேவையோ அங்கு பாதை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவிக நகர் மண்டலத்தில், எஸ்ஆர்பிகோயில் தெரு, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை அமைப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, விரைவில் டெண்டர் கோரப்படவுள்ளது.

அதன்படி, பெரம்பூர் நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் பொதுமக்கள் நடக்கும் வகையில் நடைபாதை அமைக்கப்படும். இப்பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ளன. அதன் பிறகு, பாதசாரிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது.

அதேநேரம், ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்குவதோடு, அவ்வப்போது அகற்றியும் வருகிறோம். குறிப்பாக நிறுவனம்சார்பில் வேறு இடங்களில் வாகனநிறுத்தத்துக்கான இடங்களை ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x