Published : 15 Jul 2024 03:36 PM
Last Updated : 15 Jul 2024 03:36 PM

குப்பை மேடாக மாறிவரும் காட்டாங்குளத்தூர் ஏரி: தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் போதிய பராமரிப்பின்றி குப்பை மேடாக உருமாறி வரும் காட்டாங்குளத்தூர் ஏரி. படம்: ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகேயுள்ள காட்டாங்குளத்தூர் ஏரி போதிய பராமரிப்பு இன்றி குப்பை மேடாக மாறி வருகிறது. காட்டாங்குளத்தூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கு நீராதாரமான இந்த ஏரியை தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 64 ஏரிகள் உள்ளன. இவற்றில் அடையார் உபவடிநிலப்பகுதிக்கு உட்பட்ட 12 ஏரிகளில் ஒன்று காட்டாங்குளத்தூர் ஏரி.

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஊரின் கரையோரத்தில் விரிந்து பரந்து காணப்படுகிறது இந்த ஏரி. காட்டாங்குளத்தூர், கொருக்கந்தாங்கல், நின்னக்கரை, சட்டமங்கலம், மறைமலைநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. ஏரியில் நீர் நிரம்பினால் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்வதுடன் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினையே ஏற்படாது. ஏரியைச் சுற்றிலும் மரங்கள் வளர்ந்து அப்பகுதி முழுவதும் செழிப்பாக காணப்படும்.

பல்வேறு ஊர்களுக்கு நீர்ஆதாரமாக திகழும் காட்டாங்குளத்தூர் ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் முறையான பராமரிப்பு இல்லாமல் குப்பை மேடாக உருமாறி வருகிறது. ஏரி அருகே உள்ள குடியிருப்புவாசிகளில் பலர் வீடுகளில் தேங்கும் குப்பைகளை ஏரிப்பகுதியில் கொட்டி வருகின்றனர்.

மேலும், கழிவுபொருட்கள், இறைச்சிக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவையும் ஆங்காங்கே கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளிக்கிறது இந்த ஏரி. நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து பராமரிப்பின்றி கிடப்பதால் பொதுமக்களும் எவ்வித குற்ற உணர்வும் இன்றி குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். ஏரியின் ஒருபுறத்தில் சிலர் சிறுநீர், மலம் கழிப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன்நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் காட்டாங்குளத்தூர் ஏரி உட்பட 12 ஏரிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதுகாட்டாங்குளத்தூர் ஏரியில் 1,160 மீட்டர் நீளத்துக்கு கரைப்பகுதிகள் பலப்படுத்தப்பட்டு சுற்றுப்பகுதிகளில் இருந்து வரும் நீரை ஏரியில் சேமிக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. அதன்பிறகு எவ்விதமான பராமரிப்பு பணியும் இந்த ஏரியில் மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, "இந்த ஏரியை நன்கு தூர்வாரி, கரையை பலப்படுத்தினால் மழைக்காலத்தில் ஏரி நிரம்பிவிடும். இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். கிணறுகளில் நீர் மட்டும் உயர்ந்தால் விவசாய பணிகளுக்கு அது வரப்பிரசாதமாக இருக்கும்.

ஏரியின் கரையை நன்கு பலப்படுத்தி நடைபாதை அமைத்தால் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளையில் ஏரியின் அழகை பார்த்து ரசித்தவாறு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். ஏரியை சீரமைக்க நிதி ஒரு பிரச்சினையாக இருந்தால் அருகேயுள்ள மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நிறுவனங்களை அணுகி சிஎஸ்ஆர் திட்டத்தின்கீழ் நிதி பெற்று சீரமைப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ளலாம். பொதுப்பணித்துறையும், மறைமலைநகர் நகராட்சி நிர்வாகமும் இணைந்து இதற்கு முன்முயற்சி செய்யலாம்" என்று யோசனை தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon